Thursday, October 8, 2009

அக்டோபர் ஏழாம் தேதி நடை பெற்ற விலைவாசி எதிர்ப்பு உணவு உரிமை மாநாடு

ஒரு பெண் மீன் பிடிக்கப்போனாளாம். உயிருள்ள மீன் கிடைத்ததாம். அதை எடுத்துக்கொண்டு மீன் சமைக்க தேவையான பொருள்களை வாங்க போனாளாம். பொருள்களின் விலையைக்கேட்டதும் மயக்கமே வந்துவிட்டதாம். பிறகு சமாளித்துக்கொண்டு என்ன செய்யலாம் என்று யோசித்தாளாம். இந்த விலையில் பொருள்களை வாங்கி மீன் சமைக்க முடியாது. ஆகவே இந்த் மீனை தண்ணீரிலேயே விட்டுவிடலாம் அதுவாவது பிழைத்துப் போகட்டும் என்று மீனை தண்ணீரில் விட்டு விட்டாளாம். அந்த மீனும் சந்தோஷமாக நீந்திக்கொண்டே சோனியா வாழ்க, கருணாநிதி வாழ்க என்று கத்திக்கொண்டே போனதாம். விலைவாசி உயர்வு எதிர்ப்பு, உணவு உரிமைக்கான மாநாட்டில் தோழர் ஜி. ராமகிருஷ்ணன் சொன்னது.

Friday, May 1, 2009

மே தினம்

உழைப்பின் சிறப்பு:
கரையான் தான் வாழ புற்றை கட்டுகிறது. கரையானை உண்ண வரும் பாம்பு கரையானை தின்ற பிறகு அங்கேயே தஙகிவிடுகிறது. பார்ப்பவர்கள் அந்த புற்றை கரையான் புற்று என்று கூறுவதில்லை, பாம்பு புற்று என்று கூறுகிறார்கள். பாம்பை நல்ல பாம்பு என்றும் கூறுகிறார்கள். அத்தோடு நில்லாமல் அந்த பாம்பிற்கு பாலும் வார்க்கிறார்கள். உழைப்பைச் சுரண்டி சேர்த்ததுதான் முதல். இரண்டாவதாக வந்த ஒன்றை முதல் என்று அழைக்கும் வினோதம் ஒரு புறம் இருக்கட்டும்.அந்த முதலுக்கு யார் சொந்தக்காரன் என்று கேட்டால் முதலை உருவாக்கிய உழைப்பாளியை கூறுவதில்லை, உழைப்பைச் சுரண்டிய முதலாளிதான் அதற்கு சொந்தக்காரன் என்று கூறுகிறார்கள். உழைப்பவனை அவன் உருவாக்கிய உற்பத்திச் சாதனத்திலிருந்து அன்னியப்படுத்திவிட்டு முதலாளியை பிரதான இடத்தில் வைக்கின்றார்கள். ஆனால் உண்மை என்ன? உழைப்பில்லாமல் முதல் இல்லை. ஆனால் முதல் இல்லாமல் உழைப்பு இருக்கும். முதல் உழைப்பைச் சார்ந்துதான் இருக்கும். ஆனால் உழைப்பு முதலைச் சாராமல் இருக்கமுடியும். இதனை எடுத்து உரைப்பதுதான் மே தினம்.

Sunday, March 8, 2009

செவி வழியாக பெண்ணின் மனக் குமுறல்கள்

என் பாட்டி எனக்கு ஒரு கதை சொல்லுவார்கள். நிறைய கதை சொல்லியிருக்கிறார்கள். ஆனால் இந்த கதை என் மனதில் ஆழ பதிந்துவிட்டது. இந்த கதை பல கேள்விகளையும் எழுப்பிவிட்டது. இந்த கதையை நான் என் மகனுக்கும் சொல்லியிருக்கிறேன். சிறிது சேர்த்தும் கோர்த்தும் சொல்லியிருக்கிறேன். இதுதான் கதைஎனக்கு என் பாட்டி சொன்னபடியே...

ஒரே ஒரு காட்டில ஒரு புலியாம்

அந்த காட்டுக்கு ஒரு அழகான பெண் சுள்ளி பொறுக்க வந்தாளாம்
அப்போ அந்த பெண்ணை புலி பார்த்துவிட்டதாம்
"ஆஹா இந்த பெண் எத்தனை அழகா இருக்கிறாள். இவளை கல்யாணம் செய்துகொண்டால் வாழ்க்கை பூரா சந்தோஷமா இருக்கலாமே" என்று நினைச்சதாம்

அந்த பெண்ணின் பின்னாலேயே போச்சாம்

அந்த பெண்ணும் சுள்ளி பொறுக்கி முடிந்ததும் வீடு நோக்கி போனாளாம்

பெண்ணின் பின்னாலேயே புலியும் போச்சாம்

காட்டை தாண்டி ஊருக்குள் போவதற்கு முன்னால ஊருக்கு வெளியிலேயே ஒரு வண்ணானை மிரட்டி அவனிடமிருந்து ஒரு சட்டை, வேட்டி, துண்டு எல்லாம் வாங்கி, மனுஷாளைப் போலவே வேட்டி கட்டிண்டு சட்டை போட்டுண்டு தலைப்பா கட்டிண்டு அந்த பெண்ணின் பின்னாலயே போச்சாம்

அந்த பெண் ஊருக்குள் தன் வீடு வந்ததும் வீட்டிற்குள்ள போனாளாம்

பின்னாலேயே போன புலி அவள் வீட்டின் திண்ணையில உக்கந்துண்டதாம்

கொஞ்சம் நேரம் கழிச்சு அந்த பெண்ணின் அப்பா வீட்டிலிருந்து வெளியே வந்தாராம். திண்ணையில் யாரோ உட்கார்ந்திண்டு இருக்கிறதை பார்த்துட்டு " நீங்க யாரு? என்ன வேணும்?" ன்னு கேட்டராம்

புலியும், தான் அவருடைய பெண்ணை பார்த்ததாகவும், அவளை தனக்கு ரொம்ப பிடித்துவிட்டதாகவும் அவளை கல்யாணம் செய்துகொள்ள விரும்புவதாகவும் சொன்னதாம்

இதை கேட்டதும் அந்த பெண்ணோட அப்பாக்கு ரொம்ப சந்தோஷமயிடுத்தாம். "ஆஹா அதுக்கு என்ன. பேஷா போச்சு. என் பெண்ணை உங்களுக்கு இப்பவே கல்யாணம் பண்ணி தரேன்" என்று சொல்லி பெண்ணை கல்யாணம் பண்ணி தந்துட்டாராம்

அந்த புலியும் தன் பொண்டாட்டிய அழைச்சுண்டு காட்டுக்கு போச்சாம். ரொம்ப தூரம் நடந்து வரவே அந்த பெண்ணுக்கு தாகமாக இருந்ததாம்

"என்னங்க.... தண்ணி வேணும்" ன்னு கேட்டாளாம்

ஆனா தண்ணீர் தராம "இன்னும் கொஞ்ச தூரம்தான் போயிடலாம்" ன்னு புலி சொல்லியதாம்

இன்னும் கொஞ்சம் தூரம் போனதும் இந்த பெண்ணிற்கு பசி வந்துவிடுதாம். "பசிக்கிறது ஏதாவது சாப்பிட தாங்க"ன்னு கேட்டாளாம்

இப்பவும் புலி "இன்னும் கொஞ்சம் தூரம்தான் போயிடலாம்"ன்னு சொன்னதாம்

இன்னும் கொஞ்சம் தூரம் போனதும், "இன்னும் எத்தனை தூரம் போறது? பசிக்கிறது. சாப்பிட ஏதாவது தாங்க" ன்னு கேட்டாளாம்

அப்போது அந்த புலி "சும்மா வரயா சுய ரூபத்த காட்டட்டுமா? ன்னு கேட்டதாம்

மறுபடியும் மறுபடியும் இதே மாதிரி பேசவே அந்த பெண்ணும் "அது என்ன சுய ரூபம் அதையும்தான் காட்டுங்களேன். பார்த்துடலாம்" ன்னு சொன்னாளம்

உடனே புலி தலைப்பாகையை அவிழ்த்துவிட்டு புர்ர்ர் என்று சீரியதாம்

"ஐயோ ஐயோ புலி"ன்னு கத்திக்கொண்டே அந்த பெண் காட்டுக்குள்ளேயிருந்து ஓடி வீட்டுக்கு வந்து, "ஐயோ அப்பா! யார், என்னன்னு விசாரிக்காமலேயே என்ன ஒரு புலிக்கு கல்யாணம் பண்ணிதந்துட்டீங்கள்ளே" என்று அழுதாளாம்

"ஐயோ அப்படியாம்மா" என்று அப்பாவும் அழுதாராம்

இந்த கதையில் அம்மா எங்கே? இருந்தார்களா? இருந்தும் பேசவில்லையா? பேச முடியாத நிலையா? இல்லாமல் போனார்களா? பிரசவத்தில் இறந்து போனார்களா? பெண்ணுக்கு கிடைத்த மருத்துவ வசதி அவ்வளவுதானா? தந்தை மறுமணம் செய்து கொள்ளாமல் பெண்ணை வளர்த்தாரா? அப்படி வளர்த்தவரா பெண்ணை இப்படி பாரமாய் நினைத்து பொறுப்பில்லாமல் நடந்து கொண்டார்? அல்லது அவர் மறுமணம் செய்துகொண்டதால் வந்த விளைவா? வீட்டில் வேறு யாருமே இல்லையா? உற்றார், உறவினர், ஊரார் யாருமே அந்த தந்தைக்கு அறிவுறுத்தவில்லையா? இந்த கேள்விகளெல்லாம் எனக்கு எப்போது வந்தன? இவற்றில் சிலவற்றையாவது பாட்டியிடம் கேட்டேனா? கதையைக் கேட்டுவிட்டு தூங்கிவிட்டேனா

இந்த கதை நிச்சயமாக ஒரு கதை அல்ல. என் பாட்டியோ அல்லது அவருக்கு இந்த கதையை சொன்ன அவருடைய அம்மாவோ பாட்டியோ தனக்கு நேர்ந்ததையோ அல்லது அவர் பார்த்து மற்றொருவருக்கு நேர்ந்தயையோதான் கதையாக கூறியிருக்கிறார். ஆக என் கேள்விகளெல்லாமே சம்பந்தமுள்ள நியாயமான கேள்விகளே. இந்த கேள்விகளெல்லாம் என் பாட்டிக்கும் வந்திருக்கும். அவர்களுக்கு கிடைத்த பதில் என்னவாய் இருந்திருக்கும்? தன் பேரனுக்கு இதனை சொல்லிவிடவேண்டும் என்பதாகத்தான் இருக்கும். இந்த கதை செவி வழியாகவே அதற்கு உரிய முக்கியத்துவத்தோடு சொல்லப்பட்டு வந்துள்ளதாகவே நினைக்கின்றேன்

என் மகனுக்கும் இந்த கதை நினைவில் உள்ளது. அவன் வளர வளர இந்த கதையின் ஆழம் அவனுக்கு பிடிபடும். அப்படி நேராதபடி நிலைமை மாறிடுமா

குழந்தையாயிருக்கும்போதே திருமணம் செய்து வைக்கப்பட்ட தர்மபுரி குழந்தைகள் விடாமுயற்சியோடு பள்ளிக்கு வந்து படிப்பது ஆறுதலாக இருக்கிறது. அந்தகுழந்தைகளுக்கு அவர்களின் கல்வி தொடர, நியாயம் கிடைக்க அகில உலக மகளிர் தினத்தன்று இந்த கதையை சமர்ப்பிக்கின்றேன்.

Sunday, February 15, 2009

Interesting health tit-bits

Men who eat a lot of tomatoes or tomato sauce may be giving an edge against prostat cancer. So say researchers at Harvard, who studied the eating habits of more than 47000 male health professinals. They found that men who ate tomato sauce two or four times per week had a 35 percent lower risk of developing prostate cancer that men who are none.
- a phamplet on prostat cancer released by Lister Metropolis, Chennai.

Eating too much sugar, sweets, chocolates etc. cause diabetes is a common myth.
- a phamplet on Diabetes released by Lister Metropolis, Chennai.

Tuesday, February 10, 2009

தனி நபர் வருமானம் பற்றிய பொய்யான தோற்றம்

இந்தியாவின் தனி நபர் வருமானம் கடந்த ஏழு ஆண்டுகளில் இருமடங்காக உயர்ந்துவிட்டதாக மத்திய அரசின் அறிக்கை கூறுகிறது. 2000-01 ஆம் ஆண்டு 16688 ரூபாயாக இருந்த தனி நபர் சராசரி வருமானம் 2007-08 ஆம் ஆண்டு 33283 ஆக உயர்ந்து விட்டதாக அந்த அறிக்கை கூறுகிறது. உலகில் முதல் பத்து பணக்காரர்களில் நன்கு பேர் இந்தியர் என்றும் ஆண்டுக்கு நாற்பதுக்கும் மேல் கார் அறிமுகமாகும் நாடு இந்தியா என்றும், இவை அனைத்தும் இந்தியாவின் வளர்ச்சியை காட்டுவதாகவும் அறிக்கை பெருமை பேசுகிறது. ஆனால் வசதியாக ஓர் விஷயத்தை மறந்து அல்லது மறைத்து விடுகிறது. அதாவது மேலே குறிப்பிட்ட அனைத்துமே இந்தியயாவின் பத்து சதவிகித மக்களை மட்டுமே உயர்த்தியிருக்கிறது என்பதும் உண்மையிலேயே இந்தியாவின் 70 % சதவிகித மக்களின் ஒரு நாள் வருமானம் 80 ரூபாய் மட்டுமே என்பதும், ரூபாய் இருபது கூட ஈட்ட முடியாமல் 70 % மக்கள் அவதிப்படுகிறார்கள் என்பதும், நாட்டின் முதுகெலும்பாக உள்ள 80 % மக்கள் ஈடுபட்டுள்ள விவசாயத்துறை முற்றிலும் புறக்கணிக்கப்படுவதால் நாளும் விவசாயிகளின் தற்கொலை அதிகமாகி வந்து 2007 ஒரு வருடத்தில் மட்டும் 16632 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டுள்ளார்கள் என்பதுவும் மிக வசதியாக மறைக்கப்பட்டு இருக்கின்றது.

இன்னொரு வகையிலும் இந்த மார்தட்டல் எத்தனை தவறானது என்றும் பார்க்கலாம். மேலே குறிப்பிட்டுள்ள கால கட்டத்தில் விலைவாசி இருமடங்காக உயர்ந்துள்ளது என்பது சொல்லி தெரியவேண்டியதில்லை. 2000 டிசம்பரில் ரூ 16 க்கு விற்ற கடலை பயிறு 2000 டிசம்பரில் ரூ 37 க்கு விற்றதுவும் ரூ 37 க்கு விற்ற கடலை ஆயில் ரூ 77 ஆக உயர்ந்ததுவும், அதேபோல் அனைத்து விலைவாசிகளும் இருமடங்காக உயர்ந்தும் இருக்கும்போது சராசரி வருமானம் இருமடங்காக உயர்ந்தால் அதனை எப்படி உயர்வு என்று ஏற்றுக்கொள்ளமுடியும்? -- தினமணி 7-2-09

Thursday, February 5, 2009

ஊழல் உடைமை வர்க்கத்தினருக்கு ஆதரவான அதிகார வர்க்கம்

உடைமை வர்க்கம் தனது நலனை மேலும் மேலும் பாதுகாத்துக்கொள்ள தேவையான ஏற்பாடுகளை வெட்கமில்லாமல் வெளிப்படையாகவே செய்துகொள்ளுகிறது என்பது மீண்டும் மீண்டும் தெரிய வருகிறது. இருபது வருடங்களுக்கு முன்பு இயற்றப்பெற்ற பினாமி நடவடிக்கைகள் தடுப்பு சட்டம் இன்னும் அமலுக்கு வரவில்லையாம், அதற்கு இன்னும் விதிகள் எழுதப்படவில்லையாம். அதன் காரணமாக சத்யம் கம்ப்யூட்டர் ராஜுவிற்கு எதிராக குற்றப்பத்திரிகை எழுதமுடியவில்லையாம். எகனாமிக் டைம்ஸ் ஜன 19 மேற்கோள் காட்டி தீக்கதிர் (24-01-09) பத்திரிகை கூறுகிறது. தானே முன்வந்து குற்றங்களை ஒத்துக்கொண்டால் கூட அவரை கைது செய்ய முடியாது என்று போலீஸ் கூறுகிறது. ஆக பினாமி நடவடிக்கைகள் மூலமாக ஊழல் செய்துகொள்ளுங்கள், மாற்று ஏற்ப்பாடு வரும் வரை அதனை கண்டுகொள்ள மாட்டோம் என்று ஆளும் உடைமை வர்க்க தலைமை தனது வர்க்கத்தினருக்கு வெளிப்படையாகவே தெரிவிக்கிறது.

அதுமட்டுமா, தடயவியல் தணிக்கைமுறை மூலமாக ஊழல்களை மிகச் சுலபமாக கண்டுபிடித்து விடலாமாம். ஆனால் அதற்கான பயிற்சி பெற்ற தணிக்கையாளர்கள் மிக மிக குறைவாகவே உள்ளார்களாம். 6000 பேர் தேவையாக உள்ள நிலையில் வெறும் 400 பேர்தான் உள்ளார்களாம். இவர்களால் சராசரி 480 கோடி ரூபாய் மதிப்பிலான மோசடிகளை மட்டுமே தணிக்கை செய்ய இயலுமாம். தொழில் அதிபர்களால் செய்யப்படும் ஊழலின் வேகத்த்திருக்கு இது போதவே போதாதாம். வருடத்திற்கு இரண்டு லட்சம் கோடி ரூபாய் அரசுக்கு வருமான இழப்பு ஏற்பட்டு வருகிறதாம். அரசாங்கமே தனது செலவில் தடயவியல் தணிக்கையாளர்களை பயிற்றுவிக்க பயிற்சி நிறுவங்களை ஒவ்வொரு மாநிலத்திலும் நிறுவினால் தகுந்த பலன் கிடைக்கும் என்று தினமணி பத்திரிக்கையில் (2-2-09) அப்படி பயிற்சி அளிக்கும் ஆலோசனை நிறுவனத்தின் தலைவர் மயூர் ஜோஷி கூறுகிறார். மேலே கூறியபடி ஆளும்உடைமை வர்க்கத்தின் தலைமை இதனை செய்ய முன் வருமா?

ஆனால் என்ன நடந்து கொண்டு இருக்கிறது? உத்திர பிரதேசத்தில் ஒரு ஆறு வயது சிறுமி 250 ரூபாய் திருடிவிட்டதாக கூறிக்கொண்டு அந்த ஒன்றரை அடி உயர சிறுமியை சுற்றி ஆறு போலீஸ்காரர்கள் நின்று கொண்டு அவளை முடியை பிடித்தும் காதை பிடித்தும் தூக்கி அடித்து கொடுமை படுத்தி உள்ளார்கள் ( தீக்கதிர் 4-2-09). வெட்கம் கெட்ட மானமில்லாத அதிகார வர்க்கம் சாதரண மக்களுக்கு எதிராக செயல்படவே நாங்கள் இருக்கின்றோம், ஊழல் புரியும் உடைமை வர்க்கத்தினருக்கு எதிராக செயல்பட அல்ல என்று தெளிவாகவே கூறுகிறார்கள்.

Saturday, January 31, 2009

வெறுப்பிற்கு எதிராக கலை நிகழ்வுகள்

வெறுப்பிற்கு எதிராக நிகழ்வுகள் என்று சென்னை கலைக்குழுவினர் தங்களது இருபத்தைந்தாவது ஆண்டு தொடக்கத்தை கொண்டாடினார்கள். கூத்துப்பட்டரையினர் தங்களது கொட்டைமுழக்கி நிகழ்ச்சியை துவங்கினார்கள். அவர்களது பல்வேறு விதமான முரசுகள், தப்பட்டைகள் ஒருங்கிணைந்து அடிக்கப்படும்போது மிகுந்த உற்சாகத்தை ஊட்டுகின்றது.


நேற்றைய விழாவிலேயே மிக வியப்பாகவும், பராட்டும்படியும் இருந்த நிகழ்ச்சி ப்ரீத்தி ஆத்ரேயவின் குழுவினர் அளித்த தற்கால நடனம் அல்லது அபிநய கோர்வைகள் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டு நிகழ்த்தப்பட்டது. காதுக்குள்ளே சேதி வந்தபின்னே அதை கவனிக்க மறுப்பது நியாயமில்லே என்று வெற்றி வளவன் பாடியபடி செய்திகளை காதில் வாங்கிக்கொண்டால் அவை சும்மாவா இருந்துவிடுகின்றன. நாளும் நம் காதுகளில் விழிகின்ற செய்திகள் நமக்கு எவ்வாறெல்லாம் அதிர்ச்சியையும், கவலையையும், கோபத்தையும், இன்னும் எத்தனை வகையான உணர்வுகளை ஏற்ப்படுத்துகின்றன? அவற்றை எல்லாவற்றையும் நம்மால் சரியான முறையில் உள்வாங்கிக்கொண்டு அமைதியாக இருந்துவிட முடிகின்றதா? அவை நம்மை படுத்தும் பாட்டை சமாளித்தும் சம்மாளிக்கமுடியாமலும் போகின்ற நிலைமைகளை எத்தனை யதார்த்தமாக நிகழ்ச்சியில் பங்கேற்ற பெண்கள் அபினயித்துக்காடினார்கள். முடிவில் எத்தனை பரிவோடு ஆறுதல் கூறினார்கள். அத்தனை உணர்பூர்வமாக செய்வது அவர்களை பாதிக்காமல் இருக்கும் அளவு பயிற்சி எடுத்திருப்பார்கள் என எண்ணுகின்றேன். ஒலி பதிவு செய்தவரும் மிக பிரமாதமாக உள்ளடக்கத்திற்கு ஏற்றவகையில்செய்திருந்தார். அதில் பங்கேற்றிருந்தவர்களின் ஈடுபாடு நிகழ்ச்சியில் பிரதிபலித்தது. ப்ரீத்தி ஆத்ரேயவின் பாவங்கள் மனதில் பதியும் வண்ணம் அழுத்தமாக இருந்தது. இன்னும் மனதைவிட்டு அகலவேயில்லை.

பிரசன்னா ராமசாமியின் கருத்தாக்கத்தில் உருவான ரோகிணியும் நிகிலாவும் பங்கேற்ற நவீன நடனமும் பாராட்டும்படி இருந்தது. அந்த நிகழ்வு மனுஷ்யபுத்திரனின் நான்கு வரி கவிதைக்கு உருவம் தந்தது. நிகழ்வுக்கு முன்பாக வாசிக்கப்பட்ட சுகுமாரனின் கவிதை ஒன்று மிருகங்கள் பண்புள்ளவையாக உள்ளன. தங்கள் மலக்கழிவை மற்றொரு சக மிருகம் உண்ணுமாறு பலவந்தப்படுதுவதில்லை. ஆனால் மனிதன் மட்டும் அவ்வாறு மற்றொரு மனிதனின் வாயில் மலத்தை திணிக்கின்றான். மிருகத்தைவிட கேவலப்பட்டு நிற்கின்றான் என்கிற வகையில் இருந்த அந்த கவிதையை பிரசன்னா ராமசாமி வாசித்தார். வெறுப்பிற்கு எதிராக நிகழ்வில் அந்த கவிதை வாசிக்கப்பட்டது மிக பொருத்தமான ஒன்றாக இருந்தது.

யாழ்ப்பாண பல்கலை கழகத்தின் விரிவுரையாளர் தவராஜ் ஹோபர்ட் ஈழத்து நாடகப் பாடல்கள் பாடியது மிக இனிமையாக இருந்தது. அவரின் குரல் மிக நளினமாகவும் உச்சரிப்பு வெகுவாக பாராட்டும்படியும் இருந்தது.

ஹிந்து பத்திரிக்கையின் முதன்மை ஆசிரியர் என் ராம் வாசித்த உறுதிமொழி வெறுப்பிற்கு எதிரான நிகழ்வுகளை உறுதியாக கண்டிப்பதாகவும் அதற்கு எதிராக அணிதிரள வேண்டிய அவசியத்தையும் அவ்வாறு அணிதிரள்வோம் என்றும் உறுதிபட இருந்தது. இன்றைக்கு நாளும் நடைபெற்று வரும் நிகழ்வுகளை கவலையுடன் கவனிக்கும் எவரும் இந்த உறுதிமொழி தற்போது எத்தனை அவசியம் என்பதை உணர்வார்கள். என் ராமின் தலைமையில் அனைத்து கலைஞர்களும் உறுதி மொழி ஏற்று கையொப்பமிட்டனர்.

Wednesday, January 14, 2009

நாதஸ்வர தவில் இசை

நேற்று முதல் ஐந்து நாட்களுக்கு நாதஸ்வர கச்சேரி துவங்கியது. நேற்று இஞ்சிக்குடி சகோதரர்கள் வாசித்தார்கள். மிக மிக நன்றாக இருந்தது. பிஸ்மில்லா கான் போல பர்வீன் சுல்தானாவின் கிரிதர கோபால பாடலை இஞ்சிக்குடி சுப்ரமணியன் வாசித்தார். கண்ணை மூடிக்கொண்டு கேட்டால் ஷெனாய் போலவே இருந்தது. அடுத்த கச்சேரி வாசித்த காசிம் பாபுவும் அதேபோல் ஒரு பாடலை ஷெனாய் பாணியில் வாசித்தார்கள். இப்போதைய போக்கு இப்படி ஷெனாய் போன்ற வாசிப்பை வாசிக்க வேண்டும் என்ற ஒரு கட்டாயத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுவும் நல்லதுதான். பத்தொன்பதாம் தேதி முதல் பெத்தாச்சி ஆடிடோரியத்தில் நடைபெற இருக்கும் நாதஸ்வர கச்சேரியில் முதல் கச்சேரி இஞ்சிக்குடி சகோதரர்களுடையதுதான். இருபத்துஎட்டுவரை நடைபெற இருக்கும் அந்த நாதஸ்வர விழாவிலும் இப்படியான அற்புதமான பாடல்களை கேட்கலாம்.