Saturday, January 31, 2009

வெறுப்பிற்கு எதிராக கலை நிகழ்வுகள்

வெறுப்பிற்கு எதிராக நிகழ்வுகள் என்று சென்னை கலைக்குழுவினர் தங்களது இருபத்தைந்தாவது ஆண்டு தொடக்கத்தை கொண்டாடினார்கள். கூத்துப்பட்டரையினர் தங்களது கொட்டைமுழக்கி நிகழ்ச்சியை துவங்கினார்கள். அவர்களது பல்வேறு விதமான முரசுகள், தப்பட்டைகள் ஒருங்கிணைந்து அடிக்கப்படும்போது மிகுந்த உற்சாகத்தை ஊட்டுகின்றது.


நேற்றைய விழாவிலேயே மிக வியப்பாகவும், பராட்டும்படியும் இருந்த நிகழ்ச்சி ப்ரீத்தி ஆத்ரேயவின் குழுவினர் அளித்த தற்கால நடனம் அல்லது அபிநய கோர்வைகள் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டு நிகழ்த்தப்பட்டது. காதுக்குள்ளே சேதி வந்தபின்னே அதை கவனிக்க மறுப்பது நியாயமில்லே என்று வெற்றி வளவன் பாடியபடி செய்திகளை காதில் வாங்கிக்கொண்டால் அவை சும்மாவா இருந்துவிடுகின்றன. நாளும் நம் காதுகளில் விழிகின்ற செய்திகள் நமக்கு எவ்வாறெல்லாம் அதிர்ச்சியையும், கவலையையும், கோபத்தையும், இன்னும் எத்தனை வகையான உணர்வுகளை ஏற்ப்படுத்துகின்றன? அவற்றை எல்லாவற்றையும் நம்மால் சரியான முறையில் உள்வாங்கிக்கொண்டு அமைதியாக இருந்துவிட முடிகின்றதா? அவை நம்மை படுத்தும் பாட்டை சமாளித்தும் சம்மாளிக்கமுடியாமலும் போகின்ற நிலைமைகளை எத்தனை யதார்த்தமாக நிகழ்ச்சியில் பங்கேற்ற பெண்கள் அபினயித்துக்காடினார்கள். முடிவில் எத்தனை பரிவோடு ஆறுதல் கூறினார்கள். அத்தனை உணர்பூர்வமாக செய்வது அவர்களை பாதிக்காமல் இருக்கும் அளவு பயிற்சி எடுத்திருப்பார்கள் என எண்ணுகின்றேன். ஒலி பதிவு செய்தவரும் மிக பிரமாதமாக உள்ளடக்கத்திற்கு ஏற்றவகையில்செய்திருந்தார். அதில் பங்கேற்றிருந்தவர்களின் ஈடுபாடு நிகழ்ச்சியில் பிரதிபலித்தது. ப்ரீத்தி ஆத்ரேயவின் பாவங்கள் மனதில் பதியும் வண்ணம் அழுத்தமாக இருந்தது. இன்னும் மனதைவிட்டு அகலவேயில்லை.

பிரசன்னா ராமசாமியின் கருத்தாக்கத்தில் உருவான ரோகிணியும் நிகிலாவும் பங்கேற்ற நவீன நடனமும் பாராட்டும்படி இருந்தது. அந்த நிகழ்வு மனுஷ்யபுத்திரனின் நான்கு வரி கவிதைக்கு உருவம் தந்தது. நிகழ்வுக்கு முன்பாக வாசிக்கப்பட்ட சுகுமாரனின் கவிதை ஒன்று மிருகங்கள் பண்புள்ளவையாக உள்ளன. தங்கள் மலக்கழிவை மற்றொரு சக மிருகம் உண்ணுமாறு பலவந்தப்படுதுவதில்லை. ஆனால் மனிதன் மட்டும் அவ்வாறு மற்றொரு மனிதனின் வாயில் மலத்தை திணிக்கின்றான். மிருகத்தைவிட கேவலப்பட்டு நிற்கின்றான் என்கிற வகையில் இருந்த அந்த கவிதையை பிரசன்னா ராமசாமி வாசித்தார். வெறுப்பிற்கு எதிராக நிகழ்வில் அந்த கவிதை வாசிக்கப்பட்டது மிக பொருத்தமான ஒன்றாக இருந்தது.

யாழ்ப்பாண பல்கலை கழகத்தின் விரிவுரையாளர் தவராஜ் ஹோபர்ட் ஈழத்து நாடகப் பாடல்கள் பாடியது மிக இனிமையாக இருந்தது. அவரின் குரல் மிக நளினமாகவும் உச்சரிப்பு வெகுவாக பாராட்டும்படியும் இருந்தது.

ஹிந்து பத்திரிக்கையின் முதன்மை ஆசிரியர் என் ராம் வாசித்த உறுதிமொழி வெறுப்பிற்கு எதிரான நிகழ்வுகளை உறுதியாக கண்டிப்பதாகவும் அதற்கு எதிராக அணிதிரள வேண்டிய அவசியத்தையும் அவ்வாறு அணிதிரள்வோம் என்றும் உறுதிபட இருந்தது. இன்றைக்கு நாளும் நடைபெற்று வரும் நிகழ்வுகளை கவலையுடன் கவனிக்கும் எவரும் இந்த உறுதிமொழி தற்போது எத்தனை அவசியம் என்பதை உணர்வார்கள். என் ராமின் தலைமையில் அனைத்து கலைஞர்களும் உறுதி மொழி ஏற்று கையொப்பமிட்டனர்.

2 comments:

Arun Vatsil said...
This comment has been removed by the author.
Arun Vatsil said...

i can feel the absolute need for anti-hatred events in today's world, esp. after the Mangalore incident