Monday, March 8, 2010

வெற்றி கொண்ட தாய்

இனிய தோழி! நலம் தானே?

அண்மைக் காலத்தில் என் நெஞ்சை பாதித்த நெகிழ்ச்சியான சம்பவம் ஒன்றை எழுத விரும்புகின்றேன். உறவினர் வட்டாரத்தில் ஒரு மரணம்.

முதிய பெண்மணி எண்பத்து ஓரு வயது வரை அரசி போல வாழ்ந்தவர். அரசி என்றால் செல்வத்திலோ ஆள் படை அம்பு வகையறாவிலோ அல்ல. ஏழு மக்களைப் பெற்றவர். கணவர், தபால் தந்தி நிறுவனத்தின் ஊழியர்களுக்கான யூனியன் தலைவர். உண்மையான தொழிற்சங்கவாதி. ஊழியர்களுக்கான பிரச்சினைகளைத் தீர்ப்பதிலேயே வாழ்க்கையைச் செலவழித்தவர். சிறை, கோர்ட்டு, வழக்குகள் என்றே கணவரின் காலம் போய்க்கொண்டிருக்கும்போது, பெரிய குடும்பத்தை தன் தோள்களில் தாங்கி இன்று ஏழு மக்களையும் கெளரவமான பணியில் அமர்த்தி தன் கடமைகளை மிகமிக சிறப்பாக நிறைவேற்றியவர் அந்த அம்மையார்.

அவர் வாழ்வில் குறிப்பிட்டு சொல்ல வேண்டிய மிக முக்கியமான அம்சம் ஒன்று இருக்கிறது.

ஆசாரமிக்க அந்தணர் குடும்பத்தில் பிறந்து, நியம நேஷ்டைகளை பராமரித்து, அனுஷ்டானங்களைப் பேணுகிற பெண்ணாக, பதினேழரை வயதிலேயே திருமணமாகி, அதேபோன்ற இன்னொரு சம்பிரதாயக் குடும்பத்திற்குப் போனவர் அவர். கணவரும் யாகம், ஹோமம், பூஜை, புனஸ்காரம் என்று தன் வாழ்க்கையை வகுத்துக்கொண்டவர்தான். பிறந்த குழந்தைகளுக்கும் ராமன், கிருஷ்ணன், சந்திரசேகரன் என்றே பெயரும் வைத்திருக்கிறார்கள். ஆனால் தபால் துறை சங்கத்தின் பொறுப்பேற்ற பின்னர் அவர் வாழ்க்கையில் ஒரு திருப்பம். ஆழ்ந்த பக்தியுடன் மனித நேயமும், துன்பங்களைக்கண்டு கொதித்தெழும் மன நிலையும், பிறருக்கு உதவும் மனோபாவமும் கொண்டிருந்த அவர், தொழிற்சங்க பாதைக்கு இழுக்கப்பட்டார்.

1960‍ களில் தபால் தந்தி அகில இந்திய வேலை நிறுத்தம் நடைபெற்றபோது நேரு அரசாங்கம் இரும்புக் கரம் கொண்டு அதை நசுக்கப்பார்த்தது. கைதை தவிர்க்க, தலைமறைவு வாழ்க்கை நடத்தவேண்டி வந்தது. போராட்ட வேள்வியில் இறங்கியவருக்கு மன நிலையில் மகத்தான மாற்றங்கள் ஏற்படத் தொடங்கின. ஒரு முன்னணி தொழிற்சங்க ஊழியர் என்ற நிலையிலிருந்து சமூகப் போராளியாக போர்ப்படை வீரராக அவர் உருவெடுத்தார்.

போராட்ட படிப்பினைகள், அவருக்கு எல்லாவற்றையும் விஞ்ஞான ரீதியாக அணுகும் முறையை கற்று தந்தன, மெல்ல மெல்ல பூஜை புனஸ்காரங்கள் கைவிடப்பட்டன. அந்தண குலத்தின் அடையாளமான பூணூல் பரணுக்கு ஏறியது. கூடவே தாயிடமும் குழந்தைகளிடமும் மாற்றங்கள் ஏற்பட்டன. எந்த மகனுக்கும் பூணூல் போடப்படவே இல்லை. வீடே வகுப்பறையாக, தந்தையே ஆசானாக, இயக்கத் தோழர்களே நண்பர்களாக ஆகிவிட்டார்கள்.

இதில் என்னைப் பொருத்தவரை வியப்பான விஷயம் என்றால், அந்த தாயும் மெல்ல மெல்ல, புதிய வாழ்க்கைக்கு ஏற்ப தன்னை மாற்றிக் கொண்டு வந்ததுதான். மற்றவர்களாவது வெளியுலகம் செல்பவர்கள். ல்லது கெட்டதுகளை கண்களால் காண்பவர்கள். ஆனால் அந்தப்பெண்மணி குடும்பத்தை தன் நெஞ்சில் சுமப்பவர். வீடே உலகம் என்று இருப்பவர். அவர் மாறியதுதான் எனக்கு சந்தோஷமான வியப்பு. குருட்டுத்தனமாக எதையும் ஏற்காமல், கணவருடன் மணிக்கணக்காக தர்க்கம் செய்து, முடிவில் சொந்த விருப்பத்தின் பேரில் தன்னிடமிருந்த விஞ்ஞானபூர்வமற்ற பழக்கவழக்கங்களை உதிர்த்துள்ளார்.

இருபது வருடங்களுக்கும் மேலாக உடுத்தி வந்துள்ள ஒன்பது கஜ மடிசார் புடவைக்கு விடை கொடுத்துவிட்டு, எல்லோரையும் போல ஆறு கஜ சாதாரண புடவைக் கட்டிக் கொண்டார். மன மாற்றத்தின்போது உள்ளே போன சாமி படங்கள் மற்றும் சம்பிரதாய பொருட்கள் எல்லாம் அடுத்த வீட்டிற்கு குடி போனபோது பழைய இடத்திலேயே விடப்பட்டன. மகன்கள், மகள் திருமணத்தின்போதும் சாஸ்திர, சம்பிரதாயங்கள் முழுமையாக கைவிடப்பட்டன. விஞ்ஞான, சோஷலிச வழியிலேயே குடும்பம் செலுத்தப்பட்டது.

கடைசியாக் நான் அவரைப் பார்த்தபோது உடல் நலிவுற்றிருந்தார். புன்னகையுடன் வரவேற்று அன்புடன் மென்மையாகப் பேசினார். பகத்சிங் வாழ்க்கை வரலாறு, சேகுவாரா வாழ்க்கை வரலாறு என்ற இரண்டு புத்தகங்கள் அந்தச் சமையத்தில் அவர் அருகில் இருந்ததை இப்போதும் திகைப்புடன் பார்க்கிறேன்.

இறந்தவுடன் தகவல் தெரிவிக்கப்பட, சங்கர நேத்திராலயாவிலிருந்து வந்து அவர் விழிகளை எடுத்துச் சென்றார்கள். ஏராளமானோர் வந்து அஞ்சலி செலுத்திய பிறகு அன்றே மின் மயானத்தில் எல்லாம் முடிந்தது. அடுத்து வந்த ஒரு ஞாயிரன்று அவர் வாரிசுகள் ஒரு அரங்கை வாடகைக்கு எடுத்தார்கள். 'நினைவு கூறல்' என்று பெயரிட்டு பத்திரிகை அடித்தார்கள். அம்மாவி புகைப்படங்கள், பேரன் பேத்திகளுடனான வீடியோ என்று திரைக்கு ஒளிரூட்டினார்கள். 'அம்மா' என்று தலைப்பு வைத்து ஒரு புத்தகம் உருவாக்கினார்கள். அதில் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும், தங்கள் கண்ணோட்டத்தில் அம்மாவைப் பற்றி எழுதினார்கள். நினைவு கூரல் நாளன்று குடும்பத்தினர், நண்பர்கள், சுற்றம் என்று மேடைக்கு வந்து உண்மையாக உரையாற்றி விட்டுப் போனார்கள். நல்லதொரு மதிய உணவுடன் நிகழ்ச்சி நெகிழ்ச்சியாக முடிவுற்றது. வீடு திரும்பிய எல்லோர் நெஞ்சங்களிலும் அந்த் தாய், ஒரு தேவதையாக்குரிய பவித்திரத்தன்மையுடன் கம்பீரமாக வீற்றிருந்தார்.

இறந்தவரை மரியாதையுடனும் நன்றியுடனும் அன்புடனும் நினைத்துப் பார்த்து அந்த நினைவுகளுக்கு அஞ்சலி செய்வது என்பதுதானே முறை? அதுதானே நியாயம்? அதை விடுத்து சாஸ்திரங்களுக்கும் மூடப்பழக்கங்களுக்கும் முக்கியம் கொடுத்து முகம் தெரியாத மூன்றாம் நபர்களுக்கு வணிக வியாபரம் கொடுத்து, தானம் கொடை என்ற பெயரில் சுரண்டலுக்கு அடி பணிந்து செக்குமாடகவே இருந்து என்ன சாதிக்கப்போகிறோம?

சகோதிரிகள் சிந்திக்க வேண்டுமென்று கரம் கூப்பி கேட்டுக் கொள்கிறேன்.

இது மார்ச் மாதம்!

சர்வதேச மகளிர் தினத்தினை தன்னகத்தே கொண்டுள்ள மென்மையான மாதம்!

ஓட்டுரிமையைப் பெற, ஆணைப் போலவே ஊதியம் பெற, அடிமை விலங்கினை அறுத்தெரிய என்று எம் பெண்குல மக்கள் எழுச்சியுற்று எழுந்த மாதம்!

மகாகவியின் கவிதையை நினைவுகூர்ந்து இக்கட்டுரையை முடித்துக்கொள்வோம்.

எண்ணிலா நோயுடையார்இவர்
எழுந்து நடப்பதற்கும் வலிமையிலார்
கண்ணிலாக் குழந்தைகள் போல் பிறர்
காட்டிய வழியிற்சென்று மாட்டிக்கொள்வார்.
நண்ணிய பெருங்கலைகள் பத்து
நாலாயிரங் கோடி நயந்துநின்ற
புண்ணிய நாட்டினிலே இவர்
பொறியற்ற விலங்குகள் போல்வாழ்வார்.

மீண்டும் சந்திக்கலாம், பாரதியின் புதுமைப் பெண்களாக!

அன்புடன்,
வி.உஷா
கௌரவ ஆசிரியர்,
'பெண்மணி' மார்ச் 2010.