லஞ்சம் என்பது சராசரி மனிதனை மட்டும் பாதிப்பதில்லை ஒரு நாட்டையே படுகுழியில் தள்ளுகிறது. உலகம் முழுவதும் ஆண்டுதோறும் ரூ.50 லட்சம் கோடி அளவிற்கு லஞ்சமாகப் பணம் பெறப்படுவதாக ஐக்கிய நாடுகள் சபை அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது. அதாவது லஞ்சப் பணம் ஒரு நாட்டின் மொத்த உற்பத்தியில் 17 சதவிகிதத்தை சுருட்டி விடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.ஒரு நாட்டில் நிலவும் ஊழலும் லஞ்சமும் அந்நாட்டின் சட்டதிட்டங்களை உருக்குலைத்துவிடுகின்றன. இதனால் ஜனநாயக அமைப்புகள் சிதைந்து போகின்றன. ஏழைகளுக்கும், பெண்களுக்கும், சிறுபான்மையினருக்கும் சம உரிமைகளும் வேலைவாய்ப்புகளும் தரப்படுவதை லஞ்சமும் ஊழலும் தடுத்து விடுகின்றன என்று ஐ.நா. சபை தெரிவித்துள்ளது. இதனைத் தடுக்கும் வகையில் 2005ல் நடைபெற்ற ஊழலுக்கு எதிரான மாநாட்டில் ஊழலையும் லஞ்சத்தையும் எதிர்க்கும் வகையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு சட்ட திருத்தம் கொண்டுவரப்பட்டது. அந்த தீர்மானத்தில் ஒரு நாட்டின் வளம் லஞம் ஊழல் மூலம் சுரண்டுப்படுவதால் அந்நாட்டில் பள்ளிகள், மருத்துவமனைகள் கட்டவோ, சாலை அமைக்கவோ, குடிநீர், மக்களின் வாழ்வாதாரம் போன்றவற்றை பாதுகாக்கவோ போதிய பணம் இருக்காது.
மேலும், வெளிநாடுகளிலிருந்து வரும் நிதியும் சுருட்டப்படுவதால் அந்நாட்டின் அடிப்படைக் கட்டமைப்பு வளர்ச்சிகள் முற்றிலும் நசுங்கும் நிலை உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.ஊழலும் லஞ்சமும் அதிகமாக உள்ள நாட்டில் போலி மருந்துகளும், தரம் குறைந்த மருந்துகளும் அதிகமாக புழக்கத்தில் இருக்கும். நச்சுப் பொருட்கள் கடலிலும், நதிகளிலும் அதிக அளவில் கலக்கப்படும். இதனால் சுற்றுச்சூழல் மாசுபடும். ஊழல் அதிகரித்து வருவதால் அரசின் சலுகைகள் உண்மையாகப் போய்ச் சேர வேண்டிய ஏழைகள் அந்த சலுகைகளை அனுபவிக்காமல் தொடர்ந்து ஏழைகளாகவே வாழ வேண்டிய சூழல் உருவாகி வருவதாக ஐ.நா.நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.அரசு அலுவலகங்களில் சாதாரண பணிகளில் இருப்பவர்கள் முதல் உயர் பதவிகளில் இருப்பவர்கள் வரை பெரும்பாலானவர்கள் லஞ்சத்திலும், ஊழலிலும் ஈடுபட்டுள்ளனர். ஆரம்ப சுகாதார நிலையங்கள் முதல் பல்நோக்கு மருத்துவமனைகள் வரை லஞ்சம் மற்றும் ஊழலால் ஏழைகளும், கீழ் நடுத்தர மக்களும் வஞ்சிக்கப்படுகின்றனர். இதனால் தங்களுக்கு கிடைக்க வேண்டிய நியாயமான சலுகைகளைக் கூட பெற முடியாத சூழல் உருவாகியுள்ளது.இவ்வாறு லஞசமும் ஊழலும் ஒரு புறமிருக்க இந்தியா போன்ற அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளில் வசிக்கும் பெரும் பணக்காரர்கள் அரசை ஏமாற்றி தங்களது சொத்துகளை வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கி வைத்துள்ளனர். இவற்றையெல்லாம் அரசு அறிந்திருந்தும் அந்த பணங்களையெல்லாம் இந்தியாவிற்கு கொண்டு வருவதற்குப் பதிலாக, நிதிப்பற்றாக்குறையைக் காரணம் காட்டி ஏழைகளின் மீதே சுமையை மேலும் மேலும் ஏற்றி வரும் சூழலில் ஐக்கிய நாடுகள் சபையின் இந்த ஆய்வு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.