நாளொரு கேள்வி: 07.11.2020
நவம்பர் புரட்சி தின சிறப்பு பகிர்வு
இன்று நம்மோடு இந்தியாவின் தலை சிறந்த பொருளாதார நிபுணர் *பிரபாத் பட்நாயக்* (ஜூலை 2017 Monthly Review இதழில் எழுதிய விரிவான கட்டுரையின் சாரம்- க.சுவாமிநாதன்)
####################
*கேள்வி*
சோசலிசம் நோக்கிய பயணம் நவீன தாராளமயச் சூழலில் மிக மிகக் கடினமாக மாறியுள்ளதே!
*பிரபாத் பட்நாயக்*
முதலாளித்துவம் மனித குலத்தின் பிரச்சினைகளுக்கு தீர்வைத் தரும் வல்லமை பெற்றதாக இல்லை என்பது *வரலாற்று ரீதியாக நிரூபணம்* ஆகிவிட்டது. போர்கள் உள்ளிட்ட கொடூரமான வழி முறைகளைக் கூட கையாண்டு *உழைப்பாளி மக்களை பீரங்கி இரைகளாக்கி அப் பிணக்குவியல் மீது மூலதனக் குவிப்பை நடத்திய, நடத்துகிற ரத்தம் தோய்ந்த வரலாறு* உலகம் முழுவதும் இருக்கிறது.
ஆனாலும் சோசலிசத்திற்கான பயணம் பல திருப்பங்களை, மேடு பள்ளங்களைக் கொண்டதாகவே இருக்கும். காலம் *புதிய புதிய இணைவுச் சூழல்களை* (Conjuncture) உருவாக்கும். அது அக் காலத்திய வர்க்க பலாபலன்களைப் பொறுத்து அமையும்.
*முதலாளித்துவம் தனது துவக்க காலங்களில் நிலப்பிரபுத்துவத்தை வேரறுப்பதை தனது கடமையாகக் கொண்டிருந்தது.* அதனால் அது விவசாயப் பெருங்குடி மக்களை தன் பால் ஈர்க்கவும் முடிந்தது. இதனை துவக்க கால முதலாளித்துவ ஜனநாயகப் புரட்சிகளில் காண முடிந்தது. ஆனால் பிந்தைய காலங்களில் முதலாளித்துவம் அக் கடமையை கைகழுவி விட்டது. காரணம் அதற்கு அச்சம். விவசாயப் புரட்சியை தானே நிறைவு செய்தால் சோசலிசத்தை நோக்கி நடை போடுவதற்கான உந்துதல் புரட்சிகர சக்திகளுக்கு கிடைத்து விடும் என்பதுதான். ஆகவே *விவசாயப் புரட்சியை நிறைவு செய்ய வேண்டிய கடமை தொழிலாளி வர்க்கத்தின் தோள்களில் விழுந்தது.* இதன் விளைபொருளாகவே தொழிலாளி- விவசாயி கூட்டணிக்கான தேவை எழுந்தது.
*சோசலிசத்திற்கான பயணம்* இவ்வாறு எழும் இணைவுச் சூழல்களுக்கு ஏற்ப தகவமைக்கப்பட வேண்டும்.
முதலாளிகளோடு சேர்ந்து நிலப்பிரபுத்துவத்திற்கு எதிராக ஜனநாயகப் புரட்சியை நடத்திய காலங்களில் முதலாளித்துவத்தின் இத்தகைய ஊசலாட்டத்தை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. அது போல சோசலிசப் புரட்சியை முதலாளித்துவத்தை வீழ்த்த நடத்தும் போது விவசாயிகள் மற்றும் குட்டி முதலாளிகளின் ஊசலாட்டத்தை எதிர்கொண்டு அவர்களையும் திரட்டி முன்னேற வேண்டியிருக்கும்.
பிரெஞ்சுப் புரட்சி, பாரிஸ் கம்யூன் இரண்டும் இது குறித்து தருகிற படிப்பினைகள் முக்கியம். அதை இங்கு நாம் விவரிக்கவில்லை. *பிரெஞ்சு புரட்சிக்கு* விவசாய வர்க்கங்களைப் பயன்படுத்திக் கொண்ட முதலாளிகள் *பாரிஸ் கம்யூனின் வீழ்ச்சிக்கும்* அவர்களை ஈர்த்துப் பயன்படுத்த முடிந்தது என்பதை மட்டும் இங்கு பதிவு செய்வது கூடுதலாக இது குறித்த தேடலுக்கு உதவும்.
ஆகவேதான் சோசலிசம் நோக்கிய பயணத்தில், முதலாளித்துவம் ஈடேற்றாத ஜனநாயகக் கடமைகளை முழுமை செய்வதில், *தொழிலாளி - விவசாயிக் கூட்டணியின் தலைமையாக தொழிலாளி வர்க்கம்தான் இருக்க முடியும்.*
மீண்டும் "இணைவுச் சூழல்களுக்கு" வருவோம். எப்படி முதலாளித்துவம் நிலப்பிரபுத்துவத்தோடு சமரசம் செய்து கொண்டதோ அது போன்று இணைவுச் சூழலில் ஏற்படும் மாற்றங்களை மிகச் சரியாக உள்வாங்கி, மதிப்பிட்டு, அதற்கேற்ற திட்டத்தோடு புரட்சியின் கட்டங்களை தீர்மானித்து சோசலிசம் நோக்கிய பயணத்தை அமைத்திட வேண்டும்.
*ஏகாதிபத்தியம்* என்கிற கருத்தாக்கத்தை லெனின் உருவாக்கியது, *அரசுத் தலையீடு நோக்கி உலக முதலாளித்துவம் நகர்ந்து தனக்கு ஓர் மென்மையான முகத்தை தந்து கொண்டது,* பின்னர் சர்வதேச நிதி மூலதனத்தின் மூர்க்கத்தனமான தாக்குதலை மையமாகக் கொண்ட *உலகமயப் பாதை* உருவாகியிருப்பது என "இணைவுச் சூழல்களில்" நிகழ்ந்துள்ள மாற்றங்களுக்கு ஏற்ற தகவமைப்பு சோசலிசம் நோக்கிப் பயணித்தவர்களுக்கு தேவைப்பட்டது. மார்க்சீய கருத்தியல் வளர்த்தெடுக்கப்படுவதற்கும் இதுவெல்லாம் காரணிகளாக அமைந்துள்ளன.
தற்போதைய *நவ தாராளமய "இணைவுச் சூழலை" எவ்வாறு எதிர் கொள்வது* என்ற விவாதத்திற்கு வருவோம்.
இன்றைய இணைவுச் சூழலில் உழைப்பாளி மக்களின் துயர் களைய *அரசு தலையீடு* தேவைப்படுகிறது. சர்வதேச நிதி மூலதனத்தின் தளையிலிருந்து விடுபட்டு உழைப்பாளி மக்களின் நலனுக்கான நிகழ்ச்சி நிரலை அமலாக்குகிற சுதந்திரம் அரசுக்கு இருக்க வேண்டும். இச் சுதந்திரத்தை இரண்டு வழிகளில்தான் எட்ட இயலும். ஒன்று எல்லா பெரிய தேசிய அரசாங்கங்களும் கை கோர்த்து (மாற்று உலக அரசாங்கம் போன்று) சர்வதேச நிதி மூலதனத்தின் எதிர்ப்பை எதிர்கொண்டு உழைப்பாளி மக்களின் நலனுக்கான நிகழ்ச்சி நிரலை அமலாக்க வேண்டும். இரண்டாவது, தனித் தனி நாடுகளோ, குழுவாகவோ சர்வதேச நிதி மூலதனப் பிடியில் இருந்து விடுபட்டு மூலதனக் கட்டுப்பாடுகளை விதித்து மாற்று நிகழ்ச்சி நிரலை மேற்கொள்ளலாம்.
இதை விவரிப்பதெனில், கிராக்கியின் அளவை உயர்த்தி வேலையின்மை குறைக்க வேண்டும். ட்ரம்ப் போல *"அக்கம் பக்கத்தாரிடம் இருந்து பிடுங்குவது"* (Beggar thy neighbour) என்ற வழிமுறையை கடைப் பிடித்தால் மற்ற நாடுகளும் தங்கள் சந்தையைப் பாதுகாக்க எதிர் நடவடிக்கைகளில் ஈடுபடுவார்கள். அது நெருக்கடியை ஆழப்படுத்தி வேலையின்மையை அதிகரிக்கவே செய்யும்.
அரசின் *பணக் கொள்கைகள்* (Monetary policies) இன்று கிராக்கியை உயர்த்துகிற சக்தியற்றவையாக உள்ளன. ஆகவே *நிதிக் கொள்கைகள்* வாயிலாகவே அது நடந்தேற வேண்டும்.
அதற்கு *இரண்டு வாய்ப்புகள்* உள்ளன. ஒன்று, சர்வதேச நிதி மூலதனத்தின் விருப்பங்களுக்கு மாறாக பெரிய தேசிய அரசுகள் சில, நிதி ஊக்கத் திட்டங்களை (Fiscal stimulus) அறிவிக்கலாம். 1930 இது போன்ற கோரிக்கையை ஜெர்மனி தொழிற்சங்க இயக்கம் முன் வைத்தது. கீன்சும் முன் வைத்தார். அது போன்று இந்த நாடுகளின் தொழிலாளர்களின் ஒருங்கிணைந்த போராட்டங்கள் வாயிலாகவே இதைச் செய்வதற்கான நிர்ப்பந்தங்களைத் தர முடியும்.
இரண்டாவது வழி, தனி நாடுகள் மூலதனக் கட்டுப்பாடுகள், நிதிப் பற்றாக்குறை அதிகரிப்பின் மூலம் அரசு முதலீடுகள், பணக்காரர்கள் மீது வரிகள் என்ற வழிகளில் நிதி விரிவாக்க முயற்சிகளை மேற்கொள்ளலாம். *தொழிலாளர் - விவசாயிகள் கூட்டணி பலமாக உள்ள நாடுகள்தான் மற்ற நாடுகளை விட இத்தகைய பாதையில் நீண்ட காலம் நீடித்து நிற்க முடியும்.* சர்வதேச நிதி மூலதன வலைப் பின்னலில் இருந்து விடுபடாமல் இவ் வழிமுறை சாத்தியம் இல்லை. எவ்வளவு விடுபட வேண்டும் என்பதை சூழ்நிலைகளைப் பொருத்து முடிவு செய்யலாம்.
ஒரு குறிப்பிட்ட இணைவுச் சூழலை கடப்பது என்பது சமூக அமைப்பையே மாற்றுவது என்ற இலக்கோடு இணைந்ததாக இருக்க வேண்டும். தொழிலாளி - விவசாயி கூட்டணியில் இணைகிற புரட்சிகர சக்திகளுக்கு தங்களின் இறுதி இலக்கு குறித்த புரிதல் இல்லாமல் இருந்தால் சர்வதேச நிதி மூலதனத்தை எதிர்த்த களத்திலேயே அவர்கள் காதுகளில், மார்க்ஸின் வார்த்தைகளில் *"மத்தள தத்துவ விசாரணைகளாக"* ( Drum dialectics) மாற்றப்பட வேண்டும். குறிப்பிட்ட இணைவுச் சூழலைக் கடப்பதற்கே சமூக அமைப்பைக் கடக்கிற முனைப்பு தேவைப்படுகிறது என்பதை உணர்த்த வேண்டும்.
*நிலப்பிரபுத்துவ நுகத்தடியில் இருந்து விடுதலை பெறுவதற்கான விவசாய வர்க்கங்களின் விருப்பம் (மூன்றாம் உலகின் மற்ற சிறு உற்பத்தியாளர்களுடையதும்) இன்று உலகமயம் விதித்துள்ள நவீன தாராளமயத்தின் ஒடுக்குமுறையில் இருந்தும் விடுதலை பெறுவதாக விரிந்துள்ளது.* சர்வதேச நிதி மூலதனத்தை மையமாகக் கொண்ட உலகமயத்தின் பிடியில் இருந்து விடுபடுவதையும் கடந்த இலக்கைக் கொண்ட ஜனநாயகப் புரட்சியை நடத்த வேண்டும். அப்போதுதான் தேசிய அரசால் சுதந்திரமாக செயல்பட இயலும்.
உலகமயம் தொழிலாளர்- விவசாயி கூட்டணிக்கான தேவையையும், வாய்ப்புகளையும் உருவாக்கியுள்ளன. *இரண்டு தெரிவுகள்தான் உள்ளன.* ஒன்று இக் கூட்டணியைப் பலப்படுத்துவது. இரண்டாவது, நெருக்கடிக்குள் மேலும் மேலும் மூழ்கி பாசிச சிந்தனைகள் வளர்ந்து அதன் துணையோடு சர்வதேச நிதி மூலதனத்தின் மேலாதிக்கம் தொடர அனுமதிப்பது.
ஆனால் ஒரு கேள்வி எழுகிறது. முதலாளித்துவம் ஒழுங்கற்றதாக, ஏகாதிபத்தியங்களுக்கு இடையேயான முரண்பாடுகள் மட்டுப்பட்டிருப்பதாக உள்ள நிலையில் சர்வதேச நிதி மூலதனத்தின் மேலாதிக்கத்தில் இருந்து *அவ்வளவு எளிதாக விடுதலை பெற முடியுமா?* கடும் ஒடுக்குமுறை கொண்ட தற்போதைய இணைவுச் சூழல் "வெளியேறும் வழிகளற்றதாக" உள்ளதா என்பதே அது.
இதற்கான விடை களத்திலேயே கிடைக்கும். *வலுவான தொழிலாளர் - விவசாயிக் கூட்டணி தற்போதைய இணைவுச் சூழலை கடக்க மிக முக்கியம்.* சோசலிசத்திற்கான நகர்வு காலம் எடுப்பதாக இருக்கக் கூடும். ஆனால் அதுதான் இலக்கு என்ற புரிதல் இல்லாமல் நவீன தாராளமய "இணைவுச் சூழலை" கடப்பதே எளிதாக இருக்கிறது. முதல் முன்னுரிமையாக நவீன தாராளமய எதிர்ப்பு அமையலாம். ஆனால் இறுதித் தீர்வை நோக்கிய தெளிவு, உறுதி, முனைப்பு அவசியம்.
*****************
*செவ்வானம்*
*****************
கட்டுரையை முழுமையாக வாசிக்க விரும்புபவர்கள் இந்த லிங்க்'கிற்குள் செல்லவும்.
https://monthlyreview.org/2017/07/01/the-october-revolution-and-the-survival-of-capitalism/
No comments:
Post a Comment