Sunday, September 13, 2020

சார்லி சாபளினும் வடிவேலுவும்

 


சார்லி சாப்ளின் நகைச்சுவையின் வடிவம் குறிப்பிடும்போது, “கொடூரம் என்பது நகைச்சுவையின் அடிப்படை அம்சம். பைத்தியக்காரத்தனமாக இருப்பது உண்மைத்தனத்தோடு இருக்கும். அதை பரிதாபப்படும்படி மாற்றிக்கொண்டால் பார்வையாளர்கள் விரும்பத் தொடங்கிவிடுவார்கள். வாழ்க்கையின் அவலத்தைக் காட்டும்போது அழாமல் இருப்பதற்காகவே பார்வையாளர்கள் சிரிக்கத் தொடங்குவார்கள்.


ஒரு வயதான மனிதன் வாழைப்பழத் தோல் வழுக்கி விழுகிறானென்றால் யாரும் அதற்கு சிரிக்க மாட்டார்கள். ஆனால், எப்போதும் அதீத பெருமையுடன் நடந்துகொள்ளும் ஒருவனுக்கு நடந்தால் சிரிப்பார்கள். எல்லா அசாதாரண சூழல்களும் நகைச்சுவை உணர்வோடு பார்த்தால் சிரிக்கக் கூடியவையே” என்றார்.


சாப்ளினின் இந்த விளக்கத்தை வடிவேலு மிகக்கச்சிதமாக தன் திரைவெளியெங்கும் உருவாக்கினார். கலைவடிவத்துக்கு இருமைய முரண்கள் என்பது மிக அவசியம். இப்படி இரு முரண் மையங்களை முடிவுசெய்யும் போது, சமூகத்தின் எந்தவொரு ஒரு சாராரும் அவமதிக்கப்படாமல் இருப்பதும் மிக முக்கியமானது. அதன்மூலமே, எல்லோருக்குமான ஒரு கலைநாயகனாகவும் உருவெடுக்க முடியும். வடிவேலு வேறு எவரையும்விட இங்குதான் அதிகம் ஜெயித்தார்


ஜம்பம் – போலித்தனம், வீரம் – வெட்டுவேட்டுத்தனம், புத்திசாலித்தனம் – கோமாளித்தனம், கிராமத்தன்மை – நகரத்தன்மை, அப்பாவித்தனம் – ஏமாளித்தனம், புரட்டு – நிதர்சனம் என்கிற உணர்வியல் இருமையங்களை வடிவேலு உருவாக்கிக் கொண்டார். இதன் ஒருபக்கத்தில் ஆதிக்கப் பண்பாட்டு உணர்வையும், ஒடுக்குமுறைகளின் எதார்த்தத்தையும் நிறுத்தினார். வடிவேலு ஏற்றுக்கொண்ட அனைத்துப் பாத்திரங்களிலும் இந்த வடிவத்தை நாம் காணலாம்.


தன் நடிப்பு இயக்கத்தை இப்படி வடிவமைத்துக் கொண்டு, பொதுப்புத்தியின் நினைவேட்டில், எந்தெந்த மனிதர்கள் ‘ரகசியத்தன்மை’ மிக்கவர்களாக இருந்தார்களோ அவர்கள் அனைவரையும் வடிவேலு அம்பலப்படுத்தினார். போலீஸ், திருடன், வழக்கறிஞர், மருத்துவர், அரசியல்வாதி என தனிப்பாத்திரங்களாக இருக்கும் பொதுசமூக மனிதர்களில் தொடங்கி மதம், சாதி, வங்கி, கல்வி என புறசமூகத்தின் அனைத்து பொது அமைப்புகளையும் வடிவேலு விமர்சனத்துக்கு உள்ளாக்கியிருக்கிறார். அவர்கள் மீதான ரகசியத்தன்மையை உடைத்திருக்கிறார்.


இன்னொருபுறம், தமிழ்க்குடும்பச் சூழலின் படிநிலை அமைப்புகளை வடிவேலுவுக்கு நிகராக காட்சிவெளியில் கேள்விக்கு உட்படுத்தியவர் வேறு யாரும் கிடையாது. மற்ற எல்லோரையும்விட இதில் இரண்டு முக்கியமான இடங்களில் மகத்தான சாதனையாளராக இருக்கிறார். ஒன்று அறக்கட்டுப்பாடு, இன்னொன்று பொதுசமூகத்தோடு கலத்தல்.


நகைச்சுவையும், அறமும்




சமூகத்தின் அவலங்களையும், பிற்போக்குத்தனங்களையும் கேலிசெய்யும் போது அந்த அறமின்மை வளர்வதற்கு வாய்ப்பிருக்கிறது. கேலியும், நகைச்சுவையும் பிரச்னைகளின் தீவிரத்தன்மைகளைக் குறைத்து வெறும் சிரிப்புக்கு மட்டுமே உரியதாக்கும் அபாயம் நிகழக்கூடும். ஆனால், வடிவேலுவின் நகைச்சுவைகளில் அப்படியான அறச்சிதைவை செய்யவில்லை என்றே இன்று நாம் உணர்ந்துகொள்ள வேண்டியிருக்கிறது. வடிவேலுவின் நகைச்சுவை கேலிகளுக்குள், பொதுசமூகம் கடைபிடிக்க வேண்டிய அற உணர்வும் ஊட்டப்படுவதே தனிச்சிறப்பானதாகும்.


இன்னொருபுறம், வடிவேலு கருத்துச் சொல்பவராகவோ, பிரச்சாரவாதியாகவோ இருக்கவில்லை. இதனால், மிக எளிதாக அவர் பொது சமூகத்துடன் கலந்தார். பிரச்சார நெடியில்லாத வடிவேலுவின் முற்போக்கு கேலி வடிவங்களை தமிழ் சமூகம் உள்வாங்கிக் கொண்டது. தங்கள் வாழ்வின் சகலத்திலும் வடிவேலுவை ஒரு முக்கியப்பங்குதாரராக மாற்றிக்கொண்டது.


அதனால் தான், 2011 தேர்தலில் அவர் திமுகவுக்கு ஆதரவான தேர்தல் பிரச்சாரம் செய்தபிறகும்கூட, எதிர் தரப்புகள் அவர்மீது மற்றநடிகர்கள் – பிரபலங்கள் மீது கொட்டும் வெறுப்பைக் கொட்டவில்லை.


காலமாற்றத்தில் மெல்ல மெல்ல நிகழ்ந்திருக்க வேண்டிய இந்த பொதுப்புத்தி மதிப்பீடு மாற்றத்தின் மீது வடிவேலு செலுத்திய விசை மிக உயர்வானது – அற்புதமானது. அந்த விசையே மணியாட்டி சாமியார், ஏட்டு ஏகாம்பரம், வண்டு முருகன், கட்டபொம்மு, கைப்புள்ள, கீரிப்புள்ள, நேசமணி, அய்யாசாமி, வீரபாகு, புல்லட்டு பாண்டி, வளையாபதி, ஸ்நேக் பாபு, ஸ்டீவ் வாக், புலிகேசி, ஸ்டைல் பாண்டி, குழந்தை வேலு, சுடலை, வெடிமுத்து, மாடசாமி, தீப்பொறி திருமுகம், அழகு, அலார்ட் ஆறுமுகம், சலூன் கடை சண்முகம், சூனா பானா, நாய் சேகர், சங்கி மங்கி, முருகேசன், படித்துறை பாண்டி, கபாலி கான், வடிவுக்கரசி, புலிப்பாண்டி, கிரேட் கரிகாலன் என நூற்றுக்கணக்கான பாத்திரத்தில் பொதுப்புத்தியை தோலுரித்தது.


ஆனால், 2011 தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு வடிவேலுவின் சினிமா இயக்கம் தடைபட்டது. வடிவேலு இயங்காத தமிழகம் என்கிற சோகம் நிகழத்தொடங்கியது. தமிழ் சமூகத்தின் உள்ளார்ந்த ஒரு உளவியல் துணை நிகழ்காலத்தின் செயல்பாட்டுக் களத்திலிருந்து விலகிக்கொண்டதாகவே வடிவேலுவின் இயக்கம் தடைபட்டதை நாம் மதிப்பிடவேண்டும்.




2011க்கு பிறகான 7 ஆண்டுகளில் கடுமையான அறவுணர்வு வீழ்ச்சி ஏற்பட்டதற்கு சமகாலத்தை இடித்துரைக்கும் வடிவேலு போன்ற மகா கலைஞர்களின் விலக்கம் ஒரு முக்கிய காரணம். இன்றைக்கு இந்துத்துவ நெருக்கடி, விருப்பமில்லாத தலைமையின் கீழ் ஆட்சி போன்றவற்றால் அறவுணர்வுகளை மீட்டெடுக்க வேண்டிய தேவைகளை உணர்த்துகிறது. மெர்சல் திரைப்படத்தின் ஒருகாட்சியில் பணமதிப்பிழப்பை வடிவேலு கேலிசெய்யும் போது ஒட்டுமொத்த தமிழகமும் அதை சந்தோஷமாகக் கொண்டாடியதை இங்கு நாம் கவனிக்க வேண்டும்.


வடிவேலுவின் பழைய நினைவுகள் இன்று எங்கெங்கும் வியாபித்திருக்கின்றன. ஆனால், நிகழ்காலத்தின் அவலங்களை கலைவடிவம் செய்யும் மகத்தான கலை இயக்கம் தடைபட்டிருக்கிறது. திரை நாயகர்கள் சமூகப்பிரச்னைகளை பேசுவதற்கும், வடிவேலு போன்ற மக்கள் நாயகர்கள் சமூக பிரச்னைகளை வாழ்க்கையோடு கலந்து உணரச்செய்வதற்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளன.


வடிவேலு இன்றைக்கு தொழில் ரீதியான சிக்கல்களில் உள்ளார். பொருளாதார சிக்கல்கள் காரணமாக, அவருக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகின. எல்லா கலைஞர்களும் கடக்கும் சோதனை காலமொன்று வரும். வடிவேலுக்கு அந்த சோதனைக்காலம் 7 ஆண்டுகளாய் நீடிக்கிறது. அதற்கு அவரும் ஒரு முக்கியக் காரணம்.


என்றாலும், தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் ஊடக சாட்சியாய் 13 பேர் கொல்லப்படும் காலத்தில், ஏழைகளின் நிலத்தில் கார்ப்பரேட்டுக்களுக்கு தார்கொட்டும் அரசாங்கத்தை, -23.9% பொருளாதார வீழ்ச்சிக்கு கடவுளைக் காரணம் காட்டும் நிதியமைச்சர் வாழும் நாட்டில்


வடிவேலு மீண்டும் மீண்டும் தேவைப்படுகிறார். மீம்ஸ்களாக, அனுதின உரையாடல் சொற்களாக, நொடிக்கு நொடி நியாபகம் வரக்கூடிய திரை நினைவுகளாக இருக்கும் வடிவேலு நிகழ்வெளியிலும் மீண்டும் இயங்குவது முக்கியமானது. ஏனெனில், ‘வடிவேலுகள்’ இயங்காத தமிழ்நாடு கொஞ்சம் கொஞ்சமாய் வாழமுடியாததாகிவிடும்.


கட்டுரையாளர் : விவேக் கணநாதன்

No comments: