Tuesday, August 25, 2020

இந்திய-சீன எல்லை பிரச்சினை:

 இந்திய-சீன எல்லை பிரச்சினை:

காலனித்துவ காலச் சுமை

--------------          ----------------    --------

இந்திய-சீன எல்லைத் தகராறு பிரிட்டிஷ் காலனித்துவ காலத்திலிருந்தே நீடித்து வரும் பிரச்சினை என்பதை சீனா உலகிற்கு நினைவூட்டிக் கொண்டே வந்துள்ளது. சீனா பலவீனமான நாடாக இருந்த காலத்தில் கூட, பிரிட்டிஷ் காலனித்துவவாதிகள் சீனத்தின் மீது திணித்த இடைக்கால ஏற்பாடான எல்லை வரையறைகளை ஏற்க மறுத்து வந்துள்ளதை சீன அரசியல்- வரலாற்று அறிஞர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.

1914 இல் சிம்லாவில் பிரிட்டிஷ் இந்தியா வுக்கும்,திபெத்துக்கும் இடையேயான எல்லையை வரையறுப்பதற்காக நடத்தப்பட்ட   மாநாட்டில் திபெத்தை பிரதிநிதித்துவப் படுத்தும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.அன்று பலவீனமாக இருந்த சீனாவுக்கு நிர்ப்பந்தமளித்து பிரிட்டிஷ் இந்தியாவுக்கு சாதகமாக எல்லையை நிர்ணயிபப்பதும், திபெத்துக்கு கூடுதல் சுயாட்சியை கொடுக்க வைப்பதுமே மாநாட்டின் நோக்கமாகும்.


முதலில்சீனாவிடமிருந்து திபெத்தை பிரித்து விட்டு, அடுத்து சியாங் ஜாங்கை பிரித்து பிரிட்டிஷ் இந்தியாவின் எல்லையில் இருந்து சீனாவை அப்புறப்படுத்துவதே பிரிட்டிஷாரின் திட்டமாக இருந்தது.ஏனெனில், அன்று பலவீனமாகவும், ஐரோப்பியர்களின் ஆணைப்படி ஆட்சி செய்து கொண்டிருந்த நாடாகவும் இருந்தது.இருப்பினும், சீன தூதுக் குழுவினர் பிரிட்டிஷாரின் சூழ்ச்சிகளுக்கு அடிபணிய மறுத்து விட்டனர். ஆனாலும் தனது நோக்கத்தில் உறுதியாக இருந்த பிரிட்டிஷார் பொறுக்கி எடுக்கப்பட்ட திபெத் தூதுக் குழுவினருடன் எல்லை ஒப்பந்தம் ஏற்படுத்திக் கொண்டனர். இதுதான் மக்மோகன் எல்லைக் கோடு என்று அறியப்படுகிறது. வடக்கு எல்லைக்கு பிரிட்டிஷ் காலனித்துவ அரசில் பணிபுரிந்த அதிகாரி மக்மோகன் பெயர் சூட்டப்பட்டது.


தன்மீது திணிக்கப்பட்ட இடைக்கால எல்லை நிர்ணயிப்பை சீனா கடுமையாக மறுத்தது.மக்மோகன் எல்லைக் கோட்டை ஏற்றுக்கொள்ள வில்லை என்றால் கடுமையான பின் விளைவுகளை சீனா சந்திக்க வேண்டியிருக்கும்.பேரழிவு ஏற்படும் என்று அன்றைய பிரிட்டிஷ் அயல்துறை செயலர் சீனாவை எச்சரித்தார்.


கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் மாவோவும் சரி-தேசியவாதியான சியாங் கே ஷேக்கும் சரி- இருவருமே மக்மோகன் எல்லைக் கோட்டை ஏற்றுக்கொள்ள மறுத்து விட்டனர். திபெத் சுதந்திரமான நாடு கிடையாது. எனவே,எல்லை ஒப்பந்தத்தில் கையெழுத்திட அதற்கு உரிமை இல்லை என்று வாதிட்டனர்.



சுதந்திர இந்தியாவுக்கும், சீனாவுக்கும் நல்லுறவு ஏற்படுத்தப்பட்டது.இது சுதந்திர இந்தியாவின் முதல் பத்தாண்டு காலம் நீடித்தது. எல்லையில் நிலவும் இக்கட்டான நிலைக்கு தீர்வு காண பேச்சுவார்த்தை மூலம் இந்தியாவை இணங்கச் செய்ய சீனா முயற்சித்தது. ஆனால் நேருவோ இந்தியாவை காலிசெய்து வெளியேறி விட்ட பிரிட்டிஷ் காலனித்துவ அரசு மூலமாக பெற்ற மக்மோகன் எல்லைக் கோட்டிலேயே உறுதியாக நின்றார்.


சூ என் லாய் வருகை

____       ____

எல்லைப் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கான இறுதிக்கட்ட முயற்சியாக சூ என் லாய் 1960 இல் இந்தியாவுக்கு வந்தார்.அக்சாய் சின் பகுதியின் மீதான சீனாவின் உரிமையை இந்தியா அங்கீகரித்தால்,அருணாச்சலப் பிரதேசம் முதல் மக்மோகன் கோடு வரையிலான பகுதியில் இந்தியாவின் உரிமையை ஏற்றுக்கொள்ள சீன அரசு முன்வந்தது. நேரு இந்த சலுகையை ஏற்றுக்கொள்ள மறுத்து விட்டார். எல்லைப் பிரச்சினையில் நெகிழ்வுத் தன்மையற்ற வெளியுறவு நிலைபாட்டை நேரு மேற்கொண்டார்.


இந்திய-சீன எல்லைத் தகராறு இன்றிருப்பது போல அன்று உணர்ச்சி கரமான பிரச்சினையாக மாறவில்லை. எல்லைப் பிரச்சினைக்கு சமரசத் தீர்வு காணக் கூடிய வகையில், நேரு அன்று இணையற்ற மாபெரும் தலைவராக இருந்தார். காங்கிரஸ் கட்சிக்கு நாடாளுமன்ற மிகப்பெரிய பெரும்பான்மை பலம் இருந்தது. இந்தியா வின் எல்லா மாநில சட்டமன்றங்களும் காங்கிரசின் கட்டுப்பாட்டுக்குள் இருந்தன.

திபெத் விடுதலையை ஆதரித்த ஜனசங்கம்(பாஜகவின் மூதாதைக் கட்சி), 

மற்றும் ராம் மனோகர் லோகியாவால் வழிநடத்தப்பட்ட சிறிய அளவிலான சோசலிச வட்டாரங்களும்தான் எல்லைப் பிரச்சினை தீர்வுக்கு எதிராக இருந்தனர்.


மேற்கத்திய நாடுகள், இந்தியாவின் வலதுசாரிகள் மற்றும் சமூக ஜனநாயக அரசியல் கட்சிகள் மத்தியில் திபெத் விடுதலைப் பிரச்சனை                             ஆக மாறியிருந்தது.தலாய் லாமா சீன அரசுக்கு எதிராக கலகக் கொடி உயர்த்தினார்;1959 ஆம் ஆண்டில் இந்தியாவிடம் அடைக்கலம் கோரினார்; இந்தியாவும் அவருக்கு புகலிடம் அளித்தது. இது பீகிங்கை கோபப் படுத்தியது.மேற்கு நாடுகளின்  தாராளமான நிதியுதவியுடனும்,இந்திய அரசின் ஆதரவுடனும்  வெளிநாட்டில் செயல்படும் திபெத் அரசு அமைக்கப் பட்டது.இந்திய-சீனா இருதரப்புமே கடுமையான நிலைபாடுகள் மேற்கொண்ட போதிலும், சீன கம்யூனிஸ்ட் கட்சியானது இந்தியாவுடன் உடன்பாடுக்கு இடையூறாக திபெத் பிரச்சினையை குறுக்கிடவிடவில்லை.


அமெரிக்க சிஐஏ உளவு அமைப்பு 1956 முதல், திபெத்தில் சீனாவுக்கு எதிரான சதிவேலைகளில்  ஈடுபட்டதை தலாய் லாமாவின் அண்ணன் கியாலோ தாண்டப் ஒப்புக் கொள்கிறார்.இதனால் இந்தியா மீது சீனா சந்தேகப்பட்டது.எல்லைத் தாவாவுக்கு தீர்வு காண்பதில் சீனாவுக்கிருந்த ஆர்வம் குறைந்துவிட்டது.


 1962 இந்திய- சீனப் போருக்கு

பின்னர்,தோண்டப் தலைமையில் சிஐஏ நிதி மற்றும் பயிற்சியுடன் சீனாவுக்கு எதிராக கொரில்லா தாக்குதல்கள் நடத்தப் பட்டன. இதற்கு இந்திய அரசின் மறைமுக ஆதரவும் இருந்தது. எனினும் தோண்டப் நடவடிக்கைகள் தோல்வியில் முடிந்தது.

இந்தியா திபெத்தின் தற்போதைய நிலையில் மாற்றம் ஏற்பட்டு 1949 இல் இருந்த சுயாட்சி மண்டல நிலைக்கு திபெத் திரும்ப வேண்டும் என்று இந்தியா விரும்புகிறது என்று சீனா கருதியது.இதுவே சீனா 1962 இல் இந்தியா மீது போர் தொடுத்ததற்கான முக்கிய காரணம்.


"முன்னேறுக" கொள்கை

____                _____


நேருவின் "முன்னேறுக"

( Forward Policy)கொள்கையானது, சீன மக்கள் விடுதலைப் படையின் கட்டுப்பாட்டில் இருந்த நிலப் பகுதிகளில்  இந்திய அவுட் போஸ்டுகளை அமைப்பதற்கு இந்திய ராணுவத்திற்கு பச்சைக் கொடி காட்டியது.இந்தியா உரிமை கோரும் அனைத்து பகுதிளில் இருந்தும் சீன ராணுவத்தை வெளியேற்றுவதே  இந்திய ராணுவத்தின் இலக்காக இருந்தது. இது தவறான கணிப்பாகி விட்டது.இது 1962 போர் மூள்வதற்கான காரணமாக இருந்தது. இந்திய- சீனப் போர் பற்றிய ஹெண்டர்சன் புரூக்ஸ் என்பவரின் அறிக்கை தற்போது ஆன்லைனில் கிடைக்கிறது.இந்த அறிக்கையில், நேருவின் "முன்னேறுக" கொள்கையை செயல்படுத்தும் வகையில் இந்திய ராணுவத்தின் நிலை இல்லை கூறப்டட்டுள்ளது. இரு பெரும் வலிமையான நாடுகளுக்கு இடையில் அமைந்திருக்கும் ஒரு சிறிய நாடாக (Buffer State) திபெத்தை மாற்றுவதாகவே நேருவின் ராணுவ சாகசக் கொள்கை இருந்ததாக சீன அரசியல் - ராணுவ நோக்கர்கள் கருதுகின்றனர்.


திபெத் விடுதலை என்பதற்கு நேரு ஆதரவாக இருந்தார் என்பது உண்மைதான். இருப்பினும், திபெத் விடுதலைக்கு அமெரிக்காவுடன் இந்தியா இணைந்து செயல்பட வேண்டும் என்று 1951 ஆம் ஆண்டில் அமெரிக்க வேண்டுகோள் விடுத்தபோது ,நேரு  அதை உடனடியாக நிராகரித்தார்.1954 இல் திபெத்தின் மீதான சீனாவின் இறையாண்மையை இந்தியா அங்கீகரித்தது. எனினும் காலப்போக்கில் இந்த நிலைபாட்டில் மாற்றம் ஏற்பட்டு விட்டது.சீனாவிடம் இருந்து திபெத்துக்கு கூடுதல் சுயாட்சி கோரி தலாய் லாமா போராடுவதை இந்தியா ஊக்குவித்தது.

1959 இல் தலாய்லாமாவை பின்பற்றுபவர்கள் லாசாவில் நடத்திய கலகத்தில் நேரு அரசின் பங்கிருந்தது என்று சீனா குற்றஞ்சாட்டியது.


சி.ஐ.ஏ. வில் உயர் பொறுப்புகளை வகித்த புரூஸ் ரீடல் என்பவர் எழுதிய " மறந்து போன நெருக்கடி: திபெத், சி.ஐ.ஏ., மற்றும் இந்திய- சீனப் போர்"என்ற புத்தகத்தில் (2017) சி.ஐ.ஏ. திபெத்தில் சதி வேலைகளில் ஈடுபட்டும், மற்ற காரணங்களுமே சீனா இந்தியாவின் மீது போர் தொடுக்க காரணமாயிற்று என கூறப்பட்டுள்ளது.சோசலிச நாடுகளை பலவீனப் படுத்துவதற்காக அமெரிக்கா வின் "கெடுபிடி யுத்தத்தின்" ஒரு பகுதியே அமெரிக்கா திபெத்தில் மேற்கொண்ட மறைமுக நடவடிக்கைகள் என்று தலாய்லாமா ஒப்புக் கொண்டார். 1957- 61 காலத்தில் சி.ஐ.ஏ. திபெத் பிரிவினை வாதிகளை மிகவும் தீவிரமாக ஆதரித்தது.

இந்திய உளவு அமைப்புகளின் உதவியின்றி சி.ஐ.ஏ. இப்படி செயல்பட முடியாது என்று சீனா சந்தேகப்பட்டது.


லடாக் எல்லையில் இந்தியா-சீனா வுக்கு இடையிலான சமீபத்திய மோதலால் 1962 போர் போன்ற தீவிரமான மோதலாக உருவாகும் அபாயம் உள்ளதாக புரூஸ் ரீடல் கூறியுள்ளார்.இதனால் அமெரிக்கா வரும் சீனாவுடன் போர் நடத்தும் நிலமையை ஏற்படுத்திவிடும் என்று புரூஸ் ரீடல் சுட்டிக் காட்டுகிறார்.

இந்திய- சீனப் போரின் போது நேரு அமெரிக்காவின் உதவியை நாடினார்.

முற்றுகையிடப்பட்ட  இந்தியப் படைகளுக்கு உதவுவதற்காக அமெரிக்கா வும், பிரிட்டனும் விமானங்களில் ஆயுதங்களை அனுப்பின என்று புரூஸ் ரீடல் எழுதியுள்ளார்.ஆனாலும், இந்திய ராணுவத்தை தோல்வியிலிருந்து காப்பாற்றும் அளவுக்கு போதுமான ஆயுத உதவி வரப் பெறவில்லை.சமீபத்தில்,

வெளி உலகத்திற்கு வெளியிடப்பட்ட கென்னடி நிர்வாகத்தின் ஆவணங்களின் படி, சீன நிலைகளை குண்டு வீசித் தகர்த்தெறிவதற்காக 350 போர் விமானங்களுடன் பத்தாயிரம் அமெரிக்க விமானப்படை வீரர்களையும் அனுப்புமாறு நேரு அமெரிக்காவுக்கு வேண்டுகோள் விடுத்தது தெரியவந்துள்ளது.


ஆனால், கென்னடி முடிவெடுப்பதற்கு முன்பாகவே சீனா கைப்பற்றிக் கொண்ட பகுதிகளில் இருந்து சீனா தனது படைகளை திரும்பப் பெற்றுக் கொண்டது.

ஆனால்,அவர்கள் உரிமை கோரும் அக்சாய் சின் பகுதியில் மட்டும் சீனா தனது படைகளை நிலைநிறுத்திக் கொண்டது.சீனத்துடன் இந்தியா போரிட்டுக் கொண்டிருந்த வேளையில் பாகிஸ்தான் காஷ்மீரைக் கைப்பற்றிக் கொள்ள திட்டமிட்டதாகவும், இந்த முயற்சியை கென்னடி பாகிஸ்தானை தடுத்து நிறுத்தியாகவும் புரூஸ் ரீடல் எழுதியுள்ளார்.


இந்திய- சீனப் போர் ஒரு மாதம் நடந்தது.

நீண்ட தூரம் சீனா ஊடுருவி இருந்தது.

தானாகவே, போர் நிறுத்த அறிவிப்பை வெளியிட்டது.மக்மோகன் எல்லைக் கோடானது  "எல்லைக் கட்டுப்பாட்டு கோடால்" அலுவலகப் பூர்வமாக அகற்றப் பட்டுவிட்டது.


1967 இல் நடைபெற்ற மோதல்

___.                          ____


இந்தியா, சீனா இடையே 1967 இல்

 நாது லா  மற்றும் சோ லா (Nathu La and Cho La) பகுதிகளில் மீண்டுமொரு பெரிய மோதல் ஏற்பட்டது. இந்திய வீரர்கள் 140 பேர் இறந்தனர். சீனத் தரப்பிலும் ஏராளமானோர் இறந்தனர்.இதற்குப் பின்னர்  தற்போது 2019 இல் கல்வான் பள்ளத்தாக்கில் கடுமையான மோதல் ஏற்பட்டுள்ளது.


இதற்கு முன்பும், பல்வேறு சந்தர்ப்பங்களில் கடுமையான மோதல் விளிம்பில் இரு தரப்பும் நின்றனர்.

ஆனால், நல்வாய்ப்பாக இரு தரப்பும் நிதானத்துடன் நடந்து கொண்டதால் பெரிய மோதல்கள் தவிர்க்கப் பட்டன.



1993 ஒப்பந்தம்

_______


தவறான புரிதல்கள், எதிர் பாராத நிகழ்வுகள் போன்றவற்றால் ஏற்பட்டுவிடக் கூடிய நேரடி மோதல்களைத் தவிர்ப்ப தற்காக "எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டில் அமைதியை பராமரிப்பதற்கான" சிறப்பு மிக்க ஒப்பந்தத்தில் இரு நாடுகளும் கையெழுத்திட்டன.  எல்லையில் ஏற்படும் தகராறுகளுக்கு

படைபலத்தை பிரயோகிக்காமல், பேச்சு வார்த்தை மூலமே தீர்வு காண்பதென இரு தரப்பும் ஒப்புக் கொண்டன.எல்லைக் கட்டுப்பாடு கோடு நெடுகிலும் படைபலத்தையும் குறைத்துக் கொண்டன.

1996,2005 மற்றும் 2013 ஆம் ஆண்டுகளில் மேலும் கூடுதலாக எல்லை ஒப்பந்தங்கள் ஏற்பட்டது இருதரப்பு நம்பிக்கையை பலப்படுத்தியது.


ஆனாலும், எல்லைகள் தீர்க்கமாக வரையறுக்கப்படாத காரணத்தால், சிறு சிறு மோதல்களும் நடைபெற்றன.

எனினும், கடந்த 35 ஆண்டுகளாக துப்பாக்கி சூடு நடக்கவில்லை. மோடியின் தீவிர தேசியவாத அரசின் வருகை எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டில் பதட்டநிலைச் சூழல் ஏற்பட்டது.இந்திய எல்லைப் பகுதியில் சாலைகள் அமைத்தல், அக்சாய் சின் அருகில் உள்ள லடாக்  பகுதியில் விமான நிலைய மேம்பாட்டு பணிகள் போன்றவற்றால் சீனா எச்சரிக்கை அடைந்தது.


1996 இல் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு பொக்ரானில் அணுகுண்டு பரிசோதனை நடத்தியதை நியாயப் படுத்தும் விதமாக சீனாவை கேந்திரமாக எதிரியாக அடையாளப் படுத்தியதை சீனா ஒரு போதும் மறக்காது.அப்போதைய பிரதமர் வாஜ்பாய் கிளிண்டனுக்கு எழுதிய கடிதத்தில்," எமது எல்லைகளில் 1962 இல் ராணுவ ஆக்கிரமிப்பு நடத்திய, வெளிப்படையான அணு ஆயுத சக்தி கொண்ட நாடு எமது அண்டை நாடாக உள்ளது.கடந்த சில பத்தாண்டுகளாக அந் நாட்டுடன் உறவு மேம்பட்டுள்ள போதிலும்,

இறுதி செய்யப்படாத எல்லைப் பிரச்சினையால் அவநம்பிக்கை நிலவுகிறது" என்று அணுகுண்டு சோதனைக்கு அப்பட்டமாக சீனா  காரணமாக கூறப்பட்டிருந்தது.



அடுத்து வந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் பத்து ஆண்டு கால ஆட்சியில், எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டில் பெரிய பிரச்சினைகள் ஏதுமில்லை.இருப்பினும், அந்தக் காலத்தில்தான் இந்திய- சீன எல்லை சாலைகள் அமைக்கும் திட்டம் பெரிய அளவில் மேற்கொள்ளப்பட்டன.இந்தியா சீனா கருத்து வேறுபாடு கொண்டிருந்த 73 எல்லைச் சாலைகள் போடப்பட்டன.

அமெரிக்காவுடன் அணுசக்தி ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்ட பின்னர், சீனா தொடர்பான அயலுறவு கொள்கையில் ஐ.மு.கூ. அரசு (2) அமெரிக்காவுக்கு மிகவும் நெருக்கமாக சென்றது.


சீனாவைக் கட்டுக்குள் வைப்பதற்கான சீனாவை சுற்றி வளைப்பதற்காக அமெரிக்கா ராணுவ முன்னணி மையத்தை ( Military Pivot) தொடங்கிய போது இந்தியா அதில் விருப்பமான பங்குதாரராகச் சேர்ந்தது.இந்தியா சீன எல்லையில் உட்கட்டமைப்புகளை இந்தியா பலப்படுத்தி -ஆசிய- பசிபிக் மண்டலத்தில்  தங்களுடன் இணைந்து செயல் படுவதற்கான கப்பல் படையையும் பலப்படுத்த அமெரிக்கா விரும்பியது.  


டோக்லாம் மோதலுக்குப் பின்னர், மோடியின் அரசு சாலைப் பணிகளை விரைவுபடுத்தியது.காரகோரம் மற்றும் திபெத்- ஜிங் ஜியான் நெடுஞ்சாலை அருகில் உள்ள டார்பக் -சாயோக் - தௌலத் பேக் சாலையை இந்தியா அமைந்ததே கல்வான் மோதலுக்கான முக்கிய காரணமென்று அரசியல் நோக்கர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.



மோடியின் பங்கு

_.   ‌‌.     ___

மோடி பிரதமராக பதவியேற்ற பின்னர் இந்திய-சீன உறவுகள் மோசமடடைய ஆரம்பித்தது.இதுவரை இல்லாதவாறு மோடி பதவியேற்பு விழாவில் பங்கேற்க வெளிநாட்டில் செயல்படும் திபெத் அரசுக்கு அழைப்பு அனுப்பப்பட்டது.

தேர்தல் பிரச்சாரங்களில், காங்கிரஸ் கட்சி சீனாவுக்கு எதிராக வலிமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள தவறிவிட்டதாக மோடி குற்றம் சாட்டினார்.


2014 இல் ஜி ஜின்பிங் இந்திய வருகைக்கு பின்னர் உறவுகள் மீண்டும் சீரடைந்தது.

ஆனாலும், 2017 இல்  இரண்டு மாதங்களுக்கு மேல் நீடித்த டோக்லாம் நிகழ்வு சீனாவுக்கு ஆச்சரியமேற் படுத்தியது.இந்தியா, பூடான் மற்றும் சீனாவின் எல்லைகள் ஊடறுக்கும் பகுதியாகும் டோக்லாம்.பின்னர் இந்தியா, சீனா அந்தப் பகுதியில் இருந்து பின்வாங்கின.

 பூடான் முடியாட்சி சீனாவுடனான எல்லைப் பிரச்சினையை தீர்ப்பதற்கு  தனிப்பட்ட முறையில் முயற்சிகளைத் துவக்கி உள்ளது.டோக்லாம் சம்பவத்திற்குப் பின்னர்,2028 இல் வூகானில் நடைபெற்ற உச்சி மாநாட்டில் மோடியும், ஜி ஜின்பிங் கும் எல்லைப் பகுதிகளில்  ஏற்படும் பதட்டங்கள் நிலைமை மோசமடைவதை தவிர்க்க தங்களின் ராணுவங்களுக்கு  வழிகாட்டுதலை வழங்க ஒப்புக் கொண்டனர்.இரண்டு தலைவர்களும் மீண்டும் 2019 இல் சென்னையில் சந்தித்தனர். இரு நாடுகளும் மண்டல மற்றும் சர்வதேச அளவிலான ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கு ஒப்புக் கொண்டன.


ஆனால், கடந்த இரண்டு ஆண்டு களிப்பெல்லாம்,  உலகின் அதிகமான மக்கள் தொகையைக் கொண்ட இரு நாடுகளின் தலைவர்கள் சந்தித்துக் கொண்ட ஆறு மாதங்களுக்குள்ளாக ஒன்றுமில்லாமல் மாயமாகி விட்டது.



ஜீன் 15 கல்வான் நிகழ்வு இருந்து இந்திய வீரர்களின் உயிரிழப்பில் முடிந்துள்ளது.

இந்தியாவின் உணர்ச்சி வசப்பட்ட நிலை இன்னும் நீடிக்கிறது.  எனினும், இரு நாடுகளும்  எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டில் பதட்டத்தை குறைப்பதற்கான தொடர் பேச்சு வார்த்தைகளை துவக்கி உள்ளன.இதைத் தொடர்ந்துசீன ராணுவம் சில பிரச்சினைக்குரிய முனைகளில் இருந்து வாபஸ் பெற்றுள்ளது.மோதலுக்கு வாய்ப்புள்ள பகுதிகளில் ஆளில்லா விமானங்களை இயக்குவதில்லை. பதட்டத்தை தவிர்க்கும் வகையில் ஒரு மாதம் இருதரப்பு மே கால்நடை ரோந்துப் பணியை மேற்கொள்வதில்லை என்று ஒப்புக் கொள்ளப் பட்டுள்ளது. இரண்டு நாடுகளின் உயர்மட்ட படைத் தலைவர்கள் மட்டத்தில் இதுவரை நான்கு சுற்று பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுள்ளன.


சீனா கடந்த ஆண்டில் இருந்தது போன்ற நிலைக்கு திரும்ப வேண்டும் என்று இந்தியா கோருகிறது.இந்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஜுலை மூன்றாவது வாரத்தில் லடாக் சென்ற போது, உடன்பாடு ஏற்பட சிறிது காலமாகலாம் என்று தெரிவித்துள்ளார்.


இரு தரப்புமே ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்தல் அடிப்படையில்,  எல்லைப் பிரச்சினைக்கு முழுமையான உடன்பாடு காண்பதே நீடித்து நிலைக்கும் அமைதியைக் கொண்டு வரும் என்பது இருதரப்புக்கும் தெரியும்.


_____________ 

ஃப்ரண்ட்லைன் ஆக.14,2020



தமிழில் ம.கதிரேசன்

No comments: