Thursday, January 15, 2015

எங்கே போவார் விவசாயி?

ஜன் தன்‘ திட்டத்தைத் துவக்கியதால் நாடே சுபிட்சம் அடைந்து கொண்டிருக்கிறது என மத்திய பாஜக அரசின் அமைச்சர்களும், ஆதரவு ஊடகங்களும் புகழ்ந்து தள்ளிக் கொண்டிருக்கின்றன.“சுமார் 1 கோடிப்பேருக்கு வங்கிக் கணக்குத் துவக்கி விட்டோம்; இது ஒரு மாபெரும் சாதனை” என பிரதமர் நரேந்திர மோடி புளகாங்கிதம் கொள்கிறார்.மறுபுறத்தில், ஏற்கனவே கணக்கு வைத்துள்ள கிராமப்புற மக்களின் வாய்ப்புகளை பறிக்கும் பணி மௌனமாக அரங்கேறி வருகிறது.மண்டல கிராமப்புற வங்கிகளில் இனிமேல் மத்திய அரசாங்கம் மற்றும் மூல வங்கியின் பங்கு இரண்டும் சேர்த்தே 51 சதம் தான் என்று குறைக்கும் வகையிலான மசோதாவை கடந்த டிசம்பர் 22ல் மத்திய பாஜக அரசு மக்களவையில் நிறைவேற்றியுள்ளது.

பட்ஜெட் கூட்டத் தொடரின் போது இது மாநிலங்களவையில் விவாதத்திற்கு வைக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மசோதாவின் மற்ற அம்சங்கள் - 1. முதலீடு ரூ.5 கோடிகளில் இருந்து ரூ.2000 கோடியாக உயர்த்தப்பட வேண்டும் என்பது, 2. மாநில அரசாங்கத்தின் பங்கினை 15 சதத்திற்கும் கீழ் குறைப்பது 3. தனியார் பங்குதாரர்களின் நாமினிகள் அவர்களுடைய பங்குகளின் அளவிற்கு ஏற்ப மண்டல கிராமப்புற வங்கிகளின் நிர்வாகக் குழுவில் 1 முதல் 3 பேர் என்ற எண்ணிக்கையில் இருப்பர் என்பது உட்பட திருத்தங்களாகக் கொண்டு வரப்பட்டுள்ளன.

இந்திய விவசாயிகளை கந்துவட்டிக்காரர்களிடம் இருந்து காப்பாற்றிட இந்திய விவசாயத் துறை பாதுகாக்கப்பட வேண்டும் என்பதற்காக 1975ம் ஆண்டு காந்தியடிகளின் பிறந்த தினத்தன்று அப்போதைய அரசாங்கத்தால் ஒரு அவசரச்சட்டத்தின் மூலம் உருவாக்கப்பட்டவைதான் `ரீஜனல் ரூரல் பேங்க்’ எனப்படும் மண்டல கிராமப்புற வங்கிகள். இதற்கான சட்டம் பின்னர் 1976ம் ஆண்டு உருவாக்கப்பட்டது.மண்டல கிராமப்புற வங்கியைப் பொறுத்த வரையில் அது மத்திய அரசாங்கம், ஸ்பான்சர் செய்யும் மூல வங்கி மற்றும் மாநில அரசாங்கம் மூன்றின் உடமையாகும். 1976ம் ஆண்டு சட்டத்தின்படி ஒரு கிராமப்புற வங்கிக்கிளையில் மத்திய அரசாங்கத்தின் பங்கு 50 சதமானம், ஸ்பான்சர் வங்கியின் பங்கு - 35 சதமானம், மாநில அரசாங்கத்தின் பங்கு - 15 சதமானம் என்றிருந்தது. இதைத்தான் தற்போதைய பாரதிய ஜனதா அரசாங்கம் மற்றொரு அவசரச் சட்டத்தின் மூலம் மத்திய மற்றும் ஸ்பான்சர் வங்கிகளின் ஒட்டு மொத்த பங்கே 51 சதம்தான் என்று குறைத்துள்ளது.
19 ஆயிரம் கிளைகள்உண்மையில் இது நாள் வரை இந்த வங்கிகளின் மூலம் கிராமப்புறத்தில் உள்ள சிறு குறு விவசாயிகளும், விவசாயக் கூலிகளும், பல்வேறு கைத்தொழில் முனைவோரும், சிறு நிறுவனங்களும் கடன் வசதி பெற்று வந்தன. தற்போது இந்தியா முழுவதும் 56 மண்டல கிராமப்புற வங்கிகள் 22 ஸ்பான்சர் வங்கிகளின் மூலம் 27 மாநிலங்களில் 639 மவட்டங்களில் இயங்கி வருகின்றன. மொத்தம் 19 ஆயிரம் கிராமப்புற வங்கிக் கிளைகள் உள்ளன. இதன் மூலம் 3 கோடி மக்கள் 2 லட்சம் கோடி ரூபாய் கடன் வசதி பெற்றுள்ளனர்.

6 லட்சம் கிராமங்கள்2011ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, நமது நாட்டில் 6,32,000 கிராமங்கள் உள்ளன. வணிக வங்கிகளின் கிராமப்புற வங்கிக் கிளைகளின் எண்ணிக்கை 30,000க்கும் குறைவே. கிராமங்களில் மட்டும் உள்ள மண்டல கிராமப்புற வங்கிகளின் கிளைகளின் எண்ணிக்கை 14,500 ஆகும். இவை இரண்டையும் சேர்த்து கணக்கில் எடுத்துக் கொண்டால் கூட, 7 சதமானம் கிராமங்களில் தான் வங்கிக் கிளைகள் உள்ளன. 2013ம் ஆண்டு ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநராக இருந்த கே.சி. சக்ரவர்த்தி, “கிராமப்புற வங்கிக் கிளைகளின் எண்ணிக்கை 1994ல் 54 சதமாக இருந்தது; இது 2013ம் ஆண்டு 37 சதமாகக் குறைந்துவிட்டது” என்கிறா


ர். இந்த புள்ளிவிவரம் சொல்வதென்ன? நவீன தாராளமயக் கொள்கைகளின் அமலாக்கத்திற்குப் பிறகு பொதுத்துறை வங்கிகள் உட்பட வணிக வங்கிகளின் நோக்கு இலக்கு என்பது கிராமப்புறங்களை விட்டு அகன்று நகர்ப்புறங்களையும், மெட்ரோ பகுதிகளையும் மையப்படுத்துவதாக அமைந்துள்ளது என்பதுதான். உண்மையில் உள்ளடக்கிய வளர்ச்சிக்கும் சரி, நிதி உள்ளடக்கத்திற்கும் சரி கிராமப்புற வங்கிகளின் எண்ணிக்கை அதிகப்படுத்தப்பட வேண்டும். 2013ம் ஆண்டு ரிசர்வ் வங்கியின் ஆய்வறிக்கையின் படி பார்த்தால் வங்கிகள் தேசியமயமாகி 44 வருடங்களுக்குப் பிறகும், மண்டல கிராமப்புற வங்கிகள் துவங்கப்பட்டு 38 ஆண்டுகள் ஆன பிறகும் நமது நாட்டில் வயது வந்தோரில் 60 சதமானம் பேருக்கு வங்கிக் கணக்கே இல்லை என்று தெரிகிறது. ரிசர்வ் வங்கியின் அதே அறிக்கை தான் கிட்டத்தட்ட 42.9 சதமான கிராமப்புற கடன்கள் நிலக்கிழார்களிடம் இருந்தும், கந்துவட்டிக்காரர்களிடம் இருந்தும், வர்த்தகர்களிடம் இருந்தும், கமிஷன் ஏஜெண்டுகளிடம் இருந்தும் பெறப்படுகின்றன என்று தெரிவிக்கிறது. இந்தச் சூழலில் மத்திய அரசாங்கம் செய்ய வேண்டியது என்ன? கூடுதலாக கிராமப்புற வங்கிகளை திறப்பதா? அல்லது இருக்கிற வங்கிக் கிளைகளும் மூடும்படி வங்கிகளை இணைப்பதா? வணிக வங்கிகளின் அனுபவம் என்ன?1990களின் ஆரம்பக் கட்டத்தில் பொதுத்துறை வங்கிகளில் இந்திய அரசாங்கத்தின் பங்குகளை 100 சதத்தில் இருந்து 51 சதமாகக் குறைத்த போது நமது அனுபவம் இந்த வங்கிகள் மக்களின் வங்கிகள் என்பதில் இருந்து ஒரு குறிப்பிட்ட வர்க்கத்தினருக்கான வங்கிகளாக மாறியதைப் பார்க்கலாம். மக்களுக்கான வங்கிச் சேவை என்பது ஒரு குறிப்பிட்ட வர்க்கத்திற்கான வங்கிச் சேவையாக மாறிப்போனது. கடனுக்கான முன்னுரிமைத் துறைகள் பின்னுக்குத் தள்ளப்பட்டுவிட்டன. கார்ப்பரேட்டுகளுக்கு கடனளிப்பதற்குத்தான் முன்னுரிமை வழங்கப்படுகிறது. கார்ப்பரேட்டுகளின் வாராக்கடன் தொகை பெருகிக் கொண்டே போகிறது. பொதுத்துறைகளில் உள்ள பங்குதாரர்களின் இயக்குநர்கள் கார்ப்பரேட்டுகளின் நலன்களுக்கு சேவை செய்வதையே முக்கியமாகக் கருதுகின்றனர். முக்கிய மற்றும் நிரந்தர மைய வேலைகள் கூட அவுட்சோர்சிங் முறையில் பெருமளவுக்கு செய்யப்படுகின்றன. வாஜ்பாய் தலைமையிலான முந்தைய பாஜக கூட்டணி அரசாங்கம் 2000ம் ஆண்டில் பொதுத்துறை வங்கிகளில் இந்திய அரசாங்கத்தின் பங்கு 33 சதம் மட்டுமே என்பதற்கான மசோதாவை கொண்டு வந்தபோது, தொழிற்சங்கங்கள், ஜனநாயக சக்திகள் மற்றும் இடதுசாரி அமைப்புகளின் கடும் எதிர்ப்புப் போராட்டங்கள் காரணமாக பொதுத்துறை வங்கிகளை தனியார்மயப்படுத்தும் இந்த ஆபத்து தடுக்கப்பட்டது. எனவே, தற்போது மத்திய அரசாங்கம் மண்டல கிராமப்புற வங்கிகளில் பங்கினை 51 சதமாகக் குறைப்பது என்பது கடன் கொடுப்பதற்கான முன்னுரிமைத் துறை எது என்பதை கண்டிப்பாக பாதிக்கும். இது கிராமப்புற வங்கிகளை பலப்படுத்துவதற்கான முயற்சியல்ல. மாறாக பங்குதாரர்களாக உள்ள இயக்குநர்கள் மக்களுக்கான சேவை என்பதில் இருந்து இந்த வங்கிகளின் திசை வழியை மாற்றவே முனைவார்கள். இந்த முயற்சி, கிராமப்புற வங்கிகளை தனியார்மயப்படுத்துவதின் ஒரு பகுதியாக மாறும். தற்கொலை அதிகரிக்கும்தேசிய மாதிரி ஆய்வறிக்கை, விவசாயிகள் பெருமளவிற்கு தற்கொலை செய்து கொண்டதற்கு வங்கிக் கடன்கள் குறைந்து போனதே காரணம் என்பதை வெளிக் கொணர்ந்துள்ளது. எனவே, இதனை தடுக்க வேண்டுமென்றால், வங்கிகளின் மூலம் விவசாயிகளுக்கு கடன் வழங்கப்பட வேண்டும். ஆனால், அரசாங்கத்தின் தற்போதைய முயற்சி என்பது விவசாயிகளின் தற்கொலைகளின் எண்ணிக்கையை அதிகரிக்குமே தவிர நிறுத்தாது. ரூ.2 லட்சம் கோடிபேசல் 3 விதிமுறைகளின் படி இந்த வங்கிகளில் முதலீட்டுத் தொகை அதிகரிக்கப்பட வேண்டியுள்ளது, அதற்காகத் தான் இந்த முயற்சி என்று அரசாங்கம் தெரிவிக்கிறது. தற்போது கிட்டத்தட்ட 3 கோடி கிராமப்புற மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள ரூ. 2 லட்சம் கோடி என்பது தற்போதுள்ள கிராமப்புற வங்கிகளின் ரூ.196 கோடி மூலதனத்தின் மூலம் தான் நடந்துள்ளது. இந்த எளிய மூலதனத்தோடு தான் இந்த வங்கிகள் ரூ. 2,40,000 கோடிகளை டெபாசிட்டுகளாகவும் பெற்றுள்ளன. இந்த நாட்டின் மக்கள் கிராமப்புற வங்கிகளை இந்திய அரசாங்கத்தின் வங்கிகள் என்ற முறையில் தான் நம்புகின்றனரே தவிர, அதனுடைய மூலதன முதலீட்டைப் பார்த்து அல்ல. 1975 முதல் இதுவரை இந்த வங்கிகளில் பங்கு மூலதனம் என்ற பெயரில் ரூ. 6000 கோடிகள் தான் வந்துள்ளன. தற்போது இந்த வங்கிகளில் கையிருப்பாக ரூ. 15,283 கோடி உள்ளது. அதாவது லாபமாக ரூ.15,283 கோடி பணம் ரிசர்வ் தொகையாக உள்ளது. அப்படியே இந்த வங்கிகளுக்கு மூலதனம் முதலீட்டிற்குத் தேவைப்படுகிறது என்றாலும், அதனை அரசாங்கமே கொடுக்கலாம். அதை விடுத்து கிராமப்புற வங்கிகளை ஒழிப்பதற்கான வேலைகளில் இறங்கியுள்ளது பாஜக அரசு.இதை எதிர்த்து எளியோரின் குரல் வலுக்கட்டும்!- 

(`பீப்பிள்ஸ் டெமாக்ரசி’ ஏட்டில், சி.பி.கிருஷ்ணன் எழுதிய கட்டுரையின் சுருக்கம்) தீக்கதிர் 14/01/15

No comments: