பிரபாத் பட்நாயக்
- தமிழில் : இ.எம். ஜோசப்
இடதுசாரிகளின்
“இறுக்கமான சித்தாந்த நிலைப்பாடுகள்” எவ்வாறு “இளைஞர்களை” “அலுப்படையச்”
செய்திருக்கின்றன, கடந்த காலங்களில் ‘‘இளைஞர்களிடம்” மார்க்சியத்திற்கு
இருந்த பெருமளவிலான ஈர்ப்பு இன்று மறைந்து விட்டது என்றெல்லாம் இன்று
அதிகம் எழுதப்பட்டு வருகிறது. பின்-நவீனத்துவவாதிகள் குறிப்பிடுவது போல,
பல்வேறு “பெருங்கதையாடல்கள்” காலப்போக்கில் சுவை இழந்து விட்டன. அவற்றுள்
மிக முக்கியமான மார்க்சியமும் பழங்கதையாக மாறிப் போய் விட்டது என்ற
சித்திரம் முன் வைக்கப்படுகிறது.
எதிரிகள் மட்டுமல்ல…
மார்க்சிய
எதிர்ப்பாளர்கள் மட்டுமே இத்தகைய கருத்துக்களைக் கூறுவதாகக்
கொள்ளமுடியாது. “மார்க்சிய சமூக அமைப் பிற்கு எதிர் காலம் இல்லை” என்று
1896ம் ஆண்டிலேயே யூஜென் வான் பாம்-போவெர்க் (Eugen von Bohm-Bowerk) என்ற ஆஸ்திரிய நாட்டைச் சேர்ந்த முதலாளித்துவப்
பொருளாதார அறி ஞர் எழுதியிருந்தார். அவர் ஒரு மார்க்சிய விரோதி.ஆனால்,
இன்று இடதுசாரிகளின் ஆதரவாளர்கள் அல்லது இடதுசாரிகள் என்று
பொதுவாகக்கருதப்படும் சிலர் கூட இத்தகைய கருத்தினை வெளிப்படுத்தி
வருகின்றனர். எடுத்துக்காட்டாக, இன்று ஆம் ஆத்மி கட்சி அரசியல் அரங்கில்
நுழைந் திருக்கும் நிலையில், இடதுசாரிகளுக்கு மட்டுமே இது வரை சொந்தமாக
இருந்த இடத்தை அக்கட்சி பிடித்து வருவதாக நம் மீது நல்லெண்ணம் கொண்ட
இடதுசாரி ஆதரவாளர் கள் சிலர் கூட ஆதங்கம் அடைந்திருக்கின் றனர்.
அந்நிலையில், இடதுசாரிகளின் சித்தாந்த “இறுக்கமே” அதற்குக் காரணம் என்ற
முடிவிற்கும் அவர்கள் வந்திருக்கின்ற னர். வேறு வார்த்தைகளில் கூறுவது
என்றால், இடதுசாரிகள் தங்களை “மறு தகவமைப்பு” செய்து கொள்ளும் வகையில்,
ஆம் ஆத்மி கட்சியின் சித்தாந்தம் அற்ற நிலையினை, ஒரு நற்பண்பாகக் கருதி
அதைக் கடைப்பிடிக்க வேண்டும் எனக் கூறுகிறார்கள்.
விவாதத்திற்குரிய கேள்விகள்!
நகர்ப்புறங்களில்
உள்ள படித்த இளைஞர்களைத்தான் இங்கு அவர்கள் “இளை ஞர்கள்” என்று
குறிப்பிடுகிறார்கள். படித்த இளைஞர்கள் மத்தியில் மார்க்சியம் குறித்த
ஆர்வம் உண்மையில் குறைந்திருக்கிறதா? அப்படி குறைந்திருந்தால், அந்தப்
போக்கு நீடித்து நிற்குமா அல்லது ‘‘தூய்மையான அரசியல்” என்று இன்று
முழக்கமிடும் சித்தாந்தமற்றவர்கள் மத்தியில் உருவாகும் முரண்பாடுகள் நாளை
வெளிப்படும் நிலை யில் அது மறைந்து போகுமா? இன்று இடது சாரிகள்
வழக்கத்துக்கு விரோதமாக சில இடர் பாடுகளைச் சந்திக்க வேண்டியுள்ளதா?
இவற்றிற்கெல்லாம் காரணம் சித்தாந்த அம்சம் தானா அல்லது வேறு எதுவுமா?
இப்படி பல கேள்விகள் விவாதிக்கப்பட வேண்டியவையே. இருப்பினும், நான் இப்போது
அத்தனை கேள்விகளுக்குள்ளும் செல்லப் போவதில்லை. எளிமையான ஒன்றிரண்டு
அம்சங்களை மட்டுமே இங்கு விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப் போகிறேன்.
ஆர்வம் இழந்த இளைஞர்கள்!
ஒரு
வேளை இந்திய நாட்டில் படித்த நகர்புற இளைஞர்கள் மார்க்சியத்தின் மீதும்,
அதன் விளைவாக கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மீதும் ஆர்வம் இழந்து விட்டார்கள்
என்பது உண்மையாக இருக்கும் பட்சத்தில், கம்யூனிஸ்ட் இயக்கம் இதை எவ்வாறு
எதிர்கொள்வது? நகர்புற படித்த இளைஞர் களைக் கவரும் வகையில் நமது சித்தாந்த
நிலையினை நெளிவு சுளிவாக மாற்றிக் கொள்வதன் மூலம்தான் கம்யூனிஸ்ட் இயக்கம்
தன்னை “மறு தகவமைப்பு” செய்து கொள்ள வேண்டுமா? இவை தான் விடை காண வேண்டிய
கேள்விகள்.
அறிவியல் சித்தாந்தம்!
அவ்வாறுதான் "மறு தகவமைப்பு" செய்ய வேண்டும் என்பது
கண்டிப்பாக நமது பதிலாக இருக்க முடியாது. வரலாற்றுப் பின்னணியில் சமூகம்
குறித்த ஆய்வில் மார்க்சியம் ஒரு அறிவியல்பூர்வமான அணுகு முறையினை
உருவமைத்து நிற்கிறது. பிரான்ஸ் நாட்டின் மார்க்சிய தத்துவ அறிஞரான
அல்தூஸ்ஸர் கூறுவது போல, அறிவியல் உலகின் ஆய் விற்காக மார்க்ஸ் ஒரு புதிய
கண்டத் தினையே உருவாக்கினார். வரலாறு என்பதே அக்கண்டம். மார்க்சிய
நிலைப்பாடு எதனையும் மாற்ற வேண்டும் எனில், ஏற்கனவே இருக்கும் நிலை தவறு
என்பதை அறிவியல் பூர்வமாக நிருபணம் செய்தால் மட்டுமே அது சாத்தியம்.
நகர்ப்புற படித்த இளைஞர்கள் அதை ஏற்றுக் கொள்கிறார்களா என்பதை வைத்து, அதனை
முடிவு செய்ய முடியாது. எந்த ஒரு அறிவியல் கருத்துருவினையும் எவ்வாறு
தீர்மானிக்கிறார்களோ, அப்படித் தான் இதையும் தீர்மானிக்க முடியும். ஜன
ரஞ்சகமாக இருக்கிறதா இல்லையா என்பதை வைத்தோ அல்லது எந்த ஒரு குறிப்பிட்ட
சமூகப் பிரிவிற்கும் ஏற்புடையதாக இருக்கிறதா இல்லையா என்பதை வைத்தோ,
மார்க்சியப் புரிதலை மதிப்பீடு செய்ய இயலாது. ஒரு குறிப்பிட்ட காலச்
சூழ்நிலையில், மார்க் சியப் புரிதலில் சில மாற்றங்களைச் செய்யவேண்டிய தேவை
ஏற்படலாம். ஆனால், அத்தகைய தேவை இன்றைக்கு இருக்கிறதா இல்லையா,
அப்படிப்பட்ட தேவை இருக் கிறது எனில் எந்தத் திசையில் அதை மாற்ற வேண்டும்
என்பதையெல்லாம் அறிவியல் பூர்வமான ஆய்வின் மூலமே முடிவு செய்ய இயலும்.
நகர்புற படித்த இளைஞர்களின் ரசனைகள், விழைவுகள், நடப்பில் இருக்கும்
நாகரீகம் போன்றவற்றை மட்டும் வைத்து அதனை முடிவு செய்யக்கூடாது.
வணிகப் பண்டம் அல்ல!
இது
நகர்புற இளைஞர்களுக்கு மட்டுமல்ல, அனைவருக்கும் பொருந்துவ தேயாகும்.
இன்னும் கூடச் சொல்லப் போனால், மார்க்சியம் இதற்கு நேர் எதிரான ஒன்றைச்
செய்ய வேண்டியுள்ளது. இளை ஞர்களின் விருப்பத்திற்கேற்ப மார்க்சியம் தன்னை
மாற்றிக் கொள்ள முடியாத நிலையில், இளைஞர்களின் விருப்பம் ஏன் அப்படி
இருக்கிறது என்பதை அறிவியல் பூர்வமாக ஆய்வு செய்து, அதன் அடிப்படையில்
சாத்திய மான செயல் திட்டத்தினை மார்க்சியம் வகுக்கவேண்டும். அதை விடுத்து,
நகர்புற படித்தஇளைஞர்கள், நகர்புற நடுத்தர வர்க்கத்தினர், ஏன் தொழிலாளி
வர்க்கம் உள்ளிட்ட எந்த ஒரு பிரிவினர் ஏற்றுக் கொள்ளும் வகையில்
மார்க்சியம் தன்னை ஜனரஞ்சகமாக மாற்றிக் கொள்ளுமானால், அது அறிவியல்
அணுகுமுறையாக இருக்காது. மனிதகுல மேம்பாட்டிற்கான பாதையினைக்
காட்டுகின்றசமூக அமைப்பு குறித்த அணுகுமுறைக்கு மாற்றாக, சில
“நுகர்வாளர்கள்” ஏற்றுக்கொள்ளும் வகையிலான வணிகப்பண்ட மாக மார்க்சியம்
மாறிவிடும். மார்க் சியம் தன்னைத் தானே அழித்துக்கொள்வது
மட்டுமல்லாமல், மனித விடுதலைக்கான வேள்வியினையும் கைவிடுவதாக அமைந்து
விடும். இப்படி எல்லாம் கூறுவதால், நகர்புற படித்த இளைஞர்கள் பெரு மளவிற்கு
ஏற்கும் வகையில் இடதுசாரிகள் தங்களை மறு தகவமைத்துக் கொள்ள வேண்டும் எனக்
கூறுபவர்கள் அனைவரும் தீய நோக்கம் கொண்டவர்கள் என்று பொருள்
கொண்டுவிடக்கூடாது. மாறாக, அவர்களில் பெரும்பாலானோர் தங்களது இதயத்தில்
இடதுசாரிகளுக்கு உயர்ந்த இடம் அளித்திருப்பவர்கள். அவர்களது நோக்கமும்
புனிதமானது. ஆனால், பிரச்சனை இதையும் தாண்டி வெளியே இருக்கிறது.
வர்க்கங்களும், விளைவுகளும்!
கார்ப்பரேட்
மற்றும் நிதிச்செல்வந்தர் களைத் தாண்டி, நகர்புற நடுத்தர வர்க்
கத்திற்கும் உலகமயம் உதவியிருக்கிறது. சேவைத்துறையில் வளர்ச்சியடைந்த
நாடுகளிலிருந்து பிற நாடுகளுக்கு அனுப்பப்படும் வேலைகள் (outsourced jobs) சில புதிய வாய்ப்புகளை உருவாக்கியிருக்கின்றன. எனினும்,
நகர்புறத்திலுள்ள நடுத்தர வர்க்கத்தினர் அனைவருக்கும், அல்லது அதில் படித்த
பகுதியினர் அனை வருக்கும் இது உதவியிருக்கிறது எனக் கூற முடி யாது. ஆனால்,
நடுத்தர வர்க்கத்தின் உயர் தட்டினரின் வாழ்க்கைத் தரத்தில்
ஏற்பட்டிருக்கும் குறிப்பிடத்தக்க முன் னேற்றத்தின் பின்னணியில், அத்தகைய
நல்வாய்ப்பு நமக்கும் கிடைக்கும் என்றபிரமை அவ்வர்க்கத்தின் பெரும்பாலானோர்
மனதில் ஏற்பட்டிருக் கிறது.
எனவே, இந்த வர்க்கம் உலகமயத்திற்கு
ஆதரவாக நிற்கிறது. ஆனால், மறுபுறத்தில், உலகமயம் விவசாயிகளையும், சிறு
உற்பத்தியாளர் களையும் ஓட்டாண்டியாக்கி வருகிறது.தொடர்ந்து உற்பத்தியில்
ஈடுபடுவதற்கு வழி இல்லாத நிலை அவர்கள் மத்தியில் உருவாகி வருகிறது.
(விவசாயிகளின் தற் கொலைகளுக்கு இதுவே காரணம்). இது நகர்புறத்தில்,
தேர்ச்சியற்ற (unskilled) அல்லது அரைகுறைத் தேர்ச்சி பெற்ற
(semi-skilled) வேலை தேடும் பட்டாளத்தின் எண் ணிக்கையினைப் பெருக்கி
வருகிறது. தங்களது தொழிலில் தேர்ச்சி பெற்ற கைவினைஞர்கள் கூட, தத்தம்
தொழிலில் உற்பத்தியினைத் தொடர முடியாத நிலையில், தேர்ச்சியற்ற தொழிலாளர்
களுக்கான வேலைகளைத் தேடி வருகின்றனர். இவ்வகை வேலைகளின் எண் ணிக்கை
அதிகரிக்காத நிலையில், வேலை இல்லாதவர், தகுதிக்குக் குறைவான வேலைகளில்
அமர்வோர், கேஷூவல் தொழிலாளர், ஊதியம் என்ற பெயரில் அற்பசொற்ப கூலிக்காக
அவ்வப்போது கிடைக் கும் வேலைகளைச் செய்கிறவர்கள் போன்ற வர்களின் எண்ணிக்கை
அதிகரிக்க, அதிகரிக்க அணிதிரட்டப்பட்ட தொழிலாளர்களின் பேர சக்தியும்,
கூலியும் குறைந்துவருகிறது. இதன் ஒட்டுமொத்த விளைவு என்னவெனில்,
விவசாயிகள், சிறு உற்பத்தி யாளர்கள், அணிதிரட்டப்பட்ட தொழில்கள் மற்றும்
முறைசாராத் தொழில்களில் உள்ள தொழிலாளர்கள் என அனைவரும் ஏழ்மை நிலைக்குத்
தள்ளப்படுகின்றனர். எனவே உலகமயம் கார்ப்பரேட் மற்றும் நிதிச்
செல்வந்தர்களுக்கு சலுகைகள் வழங்குவது ஒருபுறமிருக்க, வெவ்வேறு
வர்க்கங்களின் மத்தியில் வெவ்வேறு விளைவுகளை உருவாக்கி வருகிறது.
“சித்தாந்த இறுக்கம்”
தங்கள் வாழ்நிலையினைப் பாதிக்கின்ற
உலகமயத்திற்கு எதிராக விவசாயிகளின் எதிர்ப்பு இருக்கிறது. அந்த எதிர்ப்பு
உலக மயத்திலிருந்து இணைப்பைத் துண்டிக்கும் அளவிற்கான வடிவங்களை எடுக்க
வேண் டும். ஆனால், அது நடைபெறவில்லை. இதுதவிர, சர்வதேச ரீதியாக
ஒருங்கிணைக்கப் பட்ட தொழிலாளர்களின் போராட்டங்கள் எதுவும் இன்று இல்லை.
எந்த உலகமய இணைப்பினை துண்டிக்க வேண்டும் என தொழிலாளர்களும், விவசாயிகளும்
விரும்புகிறார் களோ அதனை உலகமயத்தால் பயனடையும் நகர்ப்புற படித்த இளைஞர்கள்
இன்று வரை ஏற்கவில்லை. எனவே, இன்றைய சூழலில் தொழிலாளர்கள்,
விவசாயிகள் ஆகியோரின் நலன்களை மையப்படுத்தி இடதுசாரிகள் முன்வைக்கும்
கருத்துக்களுக்கும், நகர்ப்புற படித்த இளைஞர்களின் புரிதலுக்கும் இடையில்
வேறுபாடு இருப்பதில் வியப் பதற்கு ஒன்றுமில்லை. உலகமயத்தினை எதிர்ப்பதன்
மூலம், “நாட்டின் வளர்ச்சியி னை இடதுசாரிகள் பின்னோக்கித் தள்ளுகிறார்கள்”
என்பது அவர்களது இயல்புணர்வாக மாறியிருக்கிறது. இதை புரிந்து கொண்டால்,
இளைஞர்கள் மத்தியில் இடதுசாரிகளின் மீது ஏன் ஆர்வமில்லை என்பது தெளிவாகி
விடும். தொழிலாளி, விவசாயி ஆகிய அடிப்படை வர்க்கங்களுக்கு விசுவாசமாக
இடதுசாரிகள் எடுக்கும்நிலைப்பாட்டினைத் தான் அவர்கள்“சித்தாந்த இறுக்கம்”
என வர்ணிக் கிறார்கள். இடதுசாரிகள் இந்த அடிப் படை வர்க்கங்களுக்குத் தானே
கடமைப் பட்டவர்கள்?
“மறு தகவமைப்பு”
இடதுசாரிகள் மீது
நல்லெண்ணம் கொண்ட பலர், படித்த நகர்புற இளைஞர்கள் இடதுசாரிகளை விட்டு
விலகிச் செல்வது குறித்து கவலை அடைந்திருக்கின்றனர். எனவே தான் இளைஞர்களை
மீண்டும் கவர்ந்திழுக்கும் வகையில் இடதுசாரிகள் தங்களை “மறுதகவமைப்பு”
செய்து கொள்ள வேண்டும் என அறிவுரை கூறுகின்றனர். ஆனால், அத்தகைய அறிவுரை
மூலம், இடதுசாரிகள் தங்களது அடிப்படை வர்க்க நிலைப் பாடினையே மாற்றிக்கொள்ள
வேண்டும் என்று சொல்கிறோம் என்பதை அவர்கள் உணரவில்லை. ஆம் ஆத்மி போன்ற
அரசியல் கட்சிகள் “அனைவருக்கும் அனைத்துமாக” இருக்க முடியும். ஆனால்,
“மக்களிடம் நேர்மையாக நடந்து கொள்ளும்” இடதுசாரிக் கட்சிகள், மக்களை
நம்பிக்கையில் எடுத்துக் கொண்டு, அவர்களிடம் உண்மையினை மட்டுமே பேச
முடியும். எனவே, “அடிப்படை வர்க்கங்கள்” குறித்த தங்களது அடிப்படை
விசுவாசத்தினைக் கைவிடுவது என்ற பேச்சுக்கே இங்கு இடமில்லை. நகர்புற
நடுத்தர வர்க்கத்திடமிருந்து சில காலம் தனிமைப்பட வேண்டிய கட்டாயம்
இருப்பினும், இதுவே இடதுசாரிகளின் நிலைமையாக இருக்க முடியும். (உலகமயம்
உருவாக்கும் நெருக்கடிகளின் விளைவுகள் மூலம், அதன் மீதான மயக்கத்திலிருந்து
நடுத்தர வர்க்கம் தானாகவே மீளும் வரை இடதுசாரிகளுக்கு இந்த சிரமம்
இருக்கவே செய்யும்).
தெளிவான முரண்பாடு!
நகர்புற படித்த
வர்க்கத்திற்கும், அடிப்படை வர்க்கங்களுக்கும் இடையிலான முரண்பாட்டின் அளவு
விவாதத்திற்கு உரியது. அத்தகைய ஒரு முரண்பாடு இன்று வெனிசூலா, உக்ரைன்,
தாய்லாந்து ஆகிய நாடுகளில் நடக்கும் நிகழ்வுகளின் மூலம் வெளிப்பட்டு
வருகிறது. வெனிசூலாவில், நகர்ப்புற இளைஞர்களில் வசதி படைத்த ஒரு பகுதி
ஜனாதிபதி மதுரோ அரசாங்கத்திற்கு எதிராக வெளிப்படையான எதிர்ப்பு நிலையினை
மேற்கொண்டு வருகிறது. மறைந்த ஜனாதிபதி ஹ்யூகோ சாவேஸ் தொடங்கி வைத்த மக்கள்
நலத்திட்டங்களை மேலும் தொடரக் கூடாது என்பதே அவர் களின் நிலை.
விவசாயிகளுக்கு ஆதரவாக தாய்லாந்து அரசாங்கம் எடுத்து வரும்
நடவடிக்கைகளுக்கு எதிராக இளைஞர்கள் ஆர்ப்பாட்டம் செய்து வருகின்றனர். ஏற்கனவே விவாதித்தது போல, பொதுவாக, வளர்ச்சியடைந்த சமூகங்கள் அல்லாத
(மேலும், இஸ்லாமிய சமூகம் அல்லாத) இடங்களில், இடதுசாரிகள் உலகமயத்தை
எதிர்க் கிறார்கள், வலதுசாரிகள் ஆதரிக்கிறார்கள். (ஆனால், ஐரோப்பிய நாடுகள்
பலவற்றில் நிலைமை இதற்கு எதிரானது). ஐரோப்பிய யூனியனுடன் இருந்த உறவை
முறித்துக் கொண்டு ரஷ்யாவுடன் பொருளாதார ஒப்பந்தம் செய்து கொண்ட உக்ரைன்
ஜனாதிபதி யானுகோவிச் அரசாங்கத்தினை, வலதுசாரி உக்ரேனிய தேசியவாதிகள்
எதிர்த்து வருகிறார்கள். ஐரோப்பிய யூனியனுடன் நெருக்கமான உறவு வேண்டும்
என்பது அவர்களின் நிலை. பொதுவான ஐரோப்பிய நாடுகளில் நிலவும் சூழ்நிலையுடன்
ஒப்பிடும்போது, உக்ரைன் வலதுசாரிகளின் எதிர்ப்பு சற்று முரண்பாடானது.
“அலுப்பின்” வேர்கள்!
எனவே,
“மார்க்சியம் அலுத்துப் போனது”என்று எவராவது கூறினால், அந்த அலுப் பின்
வேர்களை நலன்கள் மற்றும் வர்க்க நிலைப்பாடுகளில் கண்டுபிடித்து விடலாம்.
“அலுப்பினை” தவிர்ப்பது, “அடிப்படை வர்க் கங்களின்” பால் உள்ள
விசுவாசத்தினைக் கைவிட்டு நகர்புற படித்த இளைஞர்களைக் கவரும் வகையில்,
அவர்களுடன் சமரசம் செய்துகொள்ள முயல்வது என்பது இடது சாரிகள் தங்களைத்
தாங்களே அழித்துக் கொள்வதற்கு சமமானது.
இளைஞர்கள் மீதுஅக்கறை உண்டு!
இப்படிச்
சொல்வதனால், நகர்புற படித்த இளைஞர்களுக்கும் இடதுசாரிகளுக்கும் இடையிலான
இடைவெளியினை இட்டு நிரப்ப முயற்சி செய்யக் கூடாது என்று பொருள் அல்ல.
ஆனால், நமது அடிப்படை வர்க்க நிலைப்பாடு, அவர்களை மார்க்சிசத்துடன் எவ்வளவு
“அலுப்பு” அடையச் செய்திருந் தாலும், எவ்வித சமரசத்திற்கும் இடமில்லை.
நகர்புற படித்த இளைஞர்களின் மீது இடது சாரிகளுக்கு அக்கறை உண்டு.
பிற்போக்குத் தனமான சமூக நடைமுறைகள், பாலின சமத்துவம், குடியுரிமை மற்றும்
ஜனநாயக உரிமைகள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, வெளிப்படைத் தன்மை கொண்ட
அரசாங்கம், ஊழலற்ற ஆட்சி, இப்படி பல்வேறு பிரச்சனைகள் இடதுசாரிகளின்
போராட்டத்தில் முன் னுரிமை வகிப்பவையே. “ஊழலும்”, வெளிப்படைத் தன்மையற்ற
அரசாங்கம் இவையெல்லாம் நிதி மூலதனம் கோலோச்சு கின்ற உலகமயத்தின் பகுதி
தானே? இவற்றை யெல்லாம் எதிர்த்துப் போராடும் போது, நிதி மூலதனத்தின்
ஆதிக்கத்தினையும் எதிர்க்க முடியும். ஆனால் இவற்றையெல்லாம் இடதுசாரிகள்
கையிலெடுத்துப் போராடும் போது, நகர்புற நடுத்தர வர்க்கத்தின் வர்க்க
நிலையிலிருந்து வேறுபட்டுத்தான் நிற்க வேண்டும். எனவே, நடுத்தர வர்க்க
நிலை யுடன் சமரசம் செய்து கொள்ளும் வகையில் “மறு தகவமைப்பு” என்பது
சாத்தியமல்ல.
No comments:
Post a Comment